அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம்?

பாபர் மசூதி (கோப்புப் படம்), உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் எதுவும் அண்மையில் நேரலை செய்யப்படாத நிலையில், அயோத்தி வழக்கை நேரலை செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 • Last Updated :
 • Share this:
  அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்வதற்கு தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், நேரலை செய்வதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.

  உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

  வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 3 அமைப்புகளும் நிலத்தை பகிர்ந்துகொள்ள 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அரசியல் சாசன அமர்பு முன்பு விசாரணை நடைபெற்றது. பின்னர், கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு நியமிக்கப்பட்டது.

  மத்தியஸ்தர் குழு ஜூலை கடைசி வாரத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததால் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி முதல் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

  வழக்கு விசாரணையை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்தது. மேலும், நேரலை செய்வதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் எதுவும் அண்மையில் நேரலை செய்யப்படாத நிலையில், அயோத்தி வழக்கை நேரலை செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Ilavarasan M
  First published: