நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர்! அயோத்தி வழக்கில் தமிழர்களின் பங்களிப்பு

Ayodhya Verdict | சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Share this:
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வழக்காக கருதப்படும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. இந்த வழக்கில் விசாரணை விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய பங்களிப்பு குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.

அயோத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண, நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்ற 3 பேருமே தமிழர்கள் தான்.

இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா இருந்தார். இவர் காரைக்குடியில் பிறந்தவர். 1975-ல் வழக்கறிஞராக பதிவு செய்த அவர். 2000-வது ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார். சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் செல்லாது என டிவிஷன் பெஞ்சில் மாறுபட்ட தீர்ப்பை அளித்தவர்.இந்த விவகாரம் 3வது நீதிபதிக்கு போன போது அவர் அதை உறுதிப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர், 2016-ம் ஜூலை 22-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்ற, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக அயோத்தியில் இரு சமுதாயத்தினரிடையே சமரசம் பேசி வருபவர். 2017-ம் ஆண்டும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன் வைத்த 3 அம்ச கோரிக்கை ஏற்கப்படவில்லை. நிர்மோஹி அகாரா அமைப்பு இவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மத்தியஸ்தர் குழுவின் உள்ள 3-வது நபர், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, சிறந்த மத்தியஸ்தராக அறியப்பட்டவர். பல்வேறு மத்தியஸ்தர்கள் அடங்கிய சமரசத்திற்கான மத்தியஸ்தர்கள் சபையை நிறுவியவர். அவர், இந்திய மத்தியஸ்தர்கள் அமைப்பின் தலைவராகவும், சர்வதேச மத்தியஸ்தர்கள் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இயக்குனராகவும் உள்ளார்

இவர்கள் போக, அயோத்திய வழக்கில் ராம் லல்லா அமைப்பிற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே பராசரன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.ஸ்ரீரங்கத்தில் பிறந்த இவர் அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் திறமையானவர். இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவரான இவர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தவர். பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். போபால் விஷவாயுப் பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியக் குழுவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக வாதாடினார்.ராம் லல்லா அமைப்பிற்க்காக அயோத்திய வழக்கில் வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன். இந்தியாவின் முதல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவர் கோவையை பூர்விகமாகக் கொண்டவர். காவிரி வழக்கில் தமிழக அரசின் சார்பாக வாதாடினார்.

Also see:

Published by:Vijay R
First published: