அயோத்தியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் கட்டிடக்கலை ராம் மந்திரின் கருத்து மற்றும் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டதாக இருக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India) கூறி இருக்கிறது.
உள்ளூர் மக்கள் மற்றும் யாத்ரீகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி இணைப்பை வழங்க சிவில் விமான நடவடிக்கைகளுக்காக அயோத்தியில் AAI விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜூன் மாதத்திற்குள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என கூறியுள்ள இந்திய விமான நிலைய ஆணையம், அயோத்தி விமான நிலையத்தின் வடிவமைப்பு ஆன்மிக உணர்வைத் தூண்டும் வகையில், ராமர் கோயிலின் உணர்வை பிரதிபலிக்கும் அடிப்படையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த விமான நிலைய மேம்பாட்டுத் திட்டமானது ஒரு டெர்மினலை நிறுவுதல் மற்றும் ரன்வே-ஐ விரிவுபடுத்துதல் உட்பட பல வான்வழி வசதி மேம்பாடுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் AAI தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் வடிவமைப்பு விமான நிலையத்திலிருந்து வரும் மற்றும் புறப்படும் அனைத்து பயணிகளுக்கும் ஆன்மீக உணர்வை உருவாக்கும் எனவும் AAI தனது அறிக்கையில் கூறி இருக்கிறது. ரூ.242 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விமான நிலைய திட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் புனித யாத்திரை நகரத்தின் ஆன்மீக நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 6,000 சதுர மீட்டரில் பரந்து விரிந்திருக்கும் இந்த டெர்மினல் ஆண்டுக்கு 6 லட்சம் பயணிகளுடன், 300 பயணிகளைக் கையாளும் பீக் ஹவர் திறனை கொண்டிருக்கும் எனவும் AAI தெரிவித்துள்ளது.
பாரம்பரிய மற்றும் நவீன கட்டிட கலை உள்ளிட்டவற்றின் கலவையாக இந்த விமான நிலையம் இருக்கும் என கூறியுள்ள இந்திய விமான நிலைய ஆணையம், ஏர்போர்ட் டெர்மினல் ரூஃப்-ஆனது பல்வேறு உயரங்களில் சிகரங்கள் போல வடிவமைக்கப்பட்டு கட்டமைப்பிற்கு பிரமாண்ட வடிவத்தை தரும். தவிர ராமாயண கதையின் முக்கிய நிகழ்வுகளை சித்திரமாக காட்சிப்படுத்தும் ஓவியங்களும் இடம்பெறும். தவிர டெர்மினலின் கண்ணாடி முகப்பு அயோத்தியின் அரண்மனையில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும்.
சுமார் 52% வளர்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த திட்டப் பணிகள் வரும் ஜூன், 2023-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையம் புனித யாத்திரை தளத்திற்கான வான்வழி அணுகலை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும். முக்கிய மத ஸ்தலமான அயோத்திக்கான நேரடி விமான பாதையானது உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களுக்கு தடையற்ற மற்றும் நேரடி இணைப்பை எளிதாக்கும். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த விமான நிலையம் இருக்கும் எனவும் AAI தெரிவித்துள்ளது.
விமான நிலைய கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஸ்கைலைட்ஸ், சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் பிறவற்றுடன் திறமையான மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் நலனுக்காக எதிர்கால உள்கட்டமைப்பு மூலம் ஆன்மீக மையமாக & உலகளாவிய சுற்றுலா மையமாக அயோத்தியை உருவாக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். எனவே அயோத்தியில் விமான நிலையத்தை மேம்படுத்துவது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு பங்களிக்கும் ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றும் அறிக்கையில் AAI குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airport, India, Uttar pradesh