முதல்வர் மமதா பானர்ஜி மீது தாக்குதல்! உச்சகட்ட பரபரப்பில் மேற்குவங்கம்!

கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் மமதா பானர்ஜி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் மமதா பானர்ஜி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  • Share this:
மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கும் முதல்வர் மமதா பானர்ஜி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் இன்று ஒவ்வொரு கோவிலாக அவர் சுவாமி தரிசனம் செய்தார். புர்பா மெதினிபூர் எனும் பகுதியில் இன்று மாலை கோவில் ஒன்றில் தரிசனம் முடித்து திரும்பும் போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் அதன் காரணமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தோய்ந்த முகத்துடன் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடையே தெரிவித்தார். தாக்குதல் நடந்த சமயத்தில் தன்னருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதித் செயல் எனவும் காரில் இருந்தவாரே அவர் தெரிவித்தார்.

மமதா பானர்ஜி


இன்றிரவு நந்திகிராமில் தங்குவதாக இருந்த மமதா பானர்ஜி இந்த சம்பவத்திற்கு பிறகு கொல்கத்தாவில் சிகிச்சை பெறுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

மமதா பானர்ஜி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் இது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் அர்ஜூன் சிங் இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், மமதா பானர்ஜி தன் மீது அனுதாபம் ஏற்படுவதற்காக நடத்திய நாடகம் இது என கூறினார். மேலும் அவர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்களா? பெரும் போலீஸ் படை அவருடனே செல்கிறது. அப்படியிருக்க யாரால் அவரை நெருங்க முடியும்? அவருக்கு பாதுகாப்பு அளித்து வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். எல்லாம் அனுதாபத்திற்காக நடத்தப்பட்ட நாடகம் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் மமதா பானர்ஜி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இடது காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மமதா மீதான தாக்குதல் குறித்து அறிந்த அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: