இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்கவுள்ள முர்முவின் அரசியல் பயணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், ஒடிசா மாநிலத்திலிருந்து ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினப் பெண், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என பல முதல்-களுக்கு சொந்தக்காரர் திரவுபதி முர்மு. வி.வி. கிரிக்கு பின்னர் ஒடிஷாவிலிருந்து தேர்வாகியுள்ள இரண்டாவது குடியரசுத் தலைவர். இரண்டாவது பெண் குடியரசுத் தலைவரும் முர்மு தான்.
President Election 2022 | குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. திரவுபதி முர்முவுக்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது பைடாபோசி கிராம தலைவராக இருந்த அவரது தந்தை பிரஞ்சி நாராயண் டூடுதான்.
இன்று வரை அடிப்படை வசதிகள் அண்டாத அந்த கிராமத்தில் மகளுக்குக் கல்வி கிடைக்கவேண்டும் என்று முர்முவை பள்ளிக் கல்விக்குப்பிறகு, ராய்ரங்பூரில் கல்லூரிப் படிப்பையும் முடிக்கவைத்தார். அங்கு அவர், இளங்கலை பட்டம் முடித்தவுடன் 1979 முதல் 1983 வரை நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் துவங்கினார்.
பின்னர், 1994-ம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். எனினும் அவரது இலக்கு அரசியலில் ஈடுப்பட்டு மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்பதே. தனது இலக்கை நோக்கி நகர்ந்த அவர் 1997- ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து ராய்ரங்பூர் கவுன்சிலராக அரசியல் பயணத்தை தொடங்கினார்.
2000 – 2009 என இரண்டு முறை ராய்ரங்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணியில் போக்குவரத்து. மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளின் அமைச்சராக சிறப்பாக செயலாற்றினார்.
சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நில்காந்த் விருதை 2007- ஆம் ஆண்டு ஒடிஷா அரசு வழங்கி முர்முவை கவுரவித்தது. எனினும் 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்
2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டவருக்கு, பதவிக்காலம் முடிந்தும் பதவியை நீட்டித்தது மத்திய அரசு. கடந்த ஆண்டு ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார், தற்போது குடியரசுத் தலைவராகி உள்ளார்.
முர்முவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்த ஒன்று. இளம் வயதிலேயே தனது கணவர் ஷ்யாம் சரண் முர்முவை மாரடைப்புக்குப் பறிகொடுத்தார். அவரது இரண்டு மகன்களில் ஒருவர் மர்மமான முறையில் 2009- ஆம் ஆண்டு உயிரிழந்தார். 3 ஆண்டுகள் கழித்து அவரது இரண்டாவது மகன் சாலை விபத்தில் பலியானார். முர்முவின் ஒரே மகள் இதிஸ்ரீ தற்போது ஒடிஷாவில் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். 2017- ஆம் ஆண்டிலும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்முவின் பெயர் பரீசிலிக்கப்பட்டது. தற்போது அந்த முயற்சி வென்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Odisha, President, President Droupadi Murmu