வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சி தனது ஆட்சியை தாக்க வைத்துள்ளது. பாஜக கூட்டணி 34 இடங்களிலும், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 12 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. முதலமைச்சரான பாஜகவின் மானிக் சாஹா போர்டோவாலி டவுன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 1,257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து முதல் முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அப்போது பாஜகவின பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சராக பதவி வகித்த நிலையில் ஆட்சி மீது அதிருப்தி குரல் அதிகரிக்கவே கட்சி மேலிட தலையீட்டின் பேரில் கடந்தாண்டு மே மாதம் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மானிக் சாஹா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிர களப்பணி ஆற்றியது. பாஜகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என மாநில வரலாற்றில் முதல் முறையாக கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன. அத்துடன் பழங்குடி இன மக்கள் குறிவைத்து பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேப் பர்மாவின் திப்ரா மோதா என்ற புது கட்சி தேர்தலில் களம் கண்டன. இவ்வாறு திரிபுரா தேர்தல் களம் சூடுபிடித்த கணப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து பேட்டி அளித்த மானிக் சாஹா, "தேர்தல் வெற்றியின் அனைத்து பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும். மத்திய மாநில டபுள் இன்ஜின் பாஜக ஆட்சிக்கு வளர்ச்சி மாடலுக்கு கிடைத்த அங்கீகாரம். பாஜக வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி. நான் கூடுதல் இடங்களுடன் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தேன். எந்த இடத்தில் தவறு நடந்தது என விரைவில் ஆய்வு செய்வோம். முதலமைச்சர் யார் என்பது குறித்து கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.