294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகவும், 126 இடங்களைக் கொண்ட அசாம் மாநில பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. அதில், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 47 தொகுதிகளுக்கும் முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்குவங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுகிறது.
மேற்குவங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்காக 10620 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 171 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க சுமார் 76 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களமிறங்குகிறார். இதனால், நந்திகிராம் தொகுதி தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஹுமாயுன் கபூர்,பாரதி கோஷ், நடிகை சயாந்திகா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா, பைரோசா பிபி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க 650 துணை ராணுவப் படை குழுக்கள் மற்றும் 12000 போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். பதற்றமான தொகுதிகளில் ஒன்றான நந்திகிராம் தொகுதியில் மட்டும் 20 குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், நந்திகிராம் தொகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நெருங்கும் வாக்குப்பதிவு எந்தப் பக்கம் அலை வீசுகிறது?
அசாமில் 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை கண்காணிக்க 730 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 50 விழுக்காடு வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்