நாடு முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் அங்குள்ள தொற்று பரவல் விகிதத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை அறிவித்து அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை அசாம் கடுமையாக்கி இருக்கிறது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை அசாம் மாநில அரசு வெளியிட்டு இருக்கிறது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் உத்தரவை அசாம் அரசு சமீபத்தில் வெளியிட்டது. மருத்துவமனைகளை தவிர பொது இடங்களில் கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் நுழைவதை அசாம் அரசு தடைசெய்து இருக்கிறது.
மேலும் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளி வகுப்புகளை நடத்துவதை நிறுத்தவும் அசாம் மாநில அரசு அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தவிர பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை எடுத்துச் செல்லுமாறு குடிமக்களை மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது. சமீபத்தில் அசாம் அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 25=ஆம் தேதி காலை 6 மணி முதல் (இன்று) அமலுக்கு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் அலுவலகத்திற்குச் செல்ல 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டிருக்க வேண்டும் என்று அசாமின் புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. அசாமில் அனைத்து மாவட்டங்களிலும் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மாற்று நாட்களில் பள்ளிகளில் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. திருமணங்கள் மற்றும் கூட்டங்களில் அதிகபட்சம் 200 பேர் அல்லது ஒரு இடத்தின் திறனில் 50% இதில் எது குறைவோ அந்த மக்கள் திறன் அனுமதிக்கப்படும். இறுதி சடங்குகள் மற்றும் மரணம் தொடர்பான நிகழ்வுகளில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
Also Read : ஓமைக்ரான் கடைசி கோவிட் வேரியண்ட் இல்லை - WHO நிபுணர் கருத்து..
சினிமாஸ் மற்றும் தியேட்டர்கள் 50% இருக்கை திறனை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே போல சினிமாஸ் மற்றும் தியேட்டர்களில் நுழைய 2 டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அசாம் அரசு அறிவித்து உள்ளது. சின்னச் சின்ன வழிபாட்டுத் தலங்களுக்குள் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை ஒரு மணி நேரத்திற்கு 60 பேர் வீதம் அனுமதிக்கவும், மற்ற இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் வீதம் அனுமதிக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அசாம் மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read : 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிகளவில் கொரோனாவால் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!
மாநிலத்தில் COVID-19 பரவலை தடுக்கஅசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) மேற்கண்ட பல புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.