முகப்பு /செய்தி /இந்தியா / கபளீகரம் செய்யும் பிரம்மபுத்திரா.. அழிகிறதா அசாம்?

கபளீகரம் செய்யும் பிரம்மபுத்திரா.. அழிகிறதா அசாம்?

அசாம்

அசாம்

Assam floods | ஆறுகளில் மட்டுமின்றி, அத்தனை இடங்களிலும் ஏற்பட்டுள்ளது வெள்ளப்பெருக்கு.கரைபுரளும் ஆறுகளால், கடல்போல் காட்சியளிப்பதோடு, வெற்றிடங்கள் எதையும் விட்டுவைக்காமல் பாய்கிறது வெள்ளம்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆண்டுதோறும் பெய்யும் கனமழையால், அசாம் மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுக்குள் அரித்துச் செல்லப்படுகிறது. இந்தியாவில் பருவமழை காலங்களில் ஆண்டுதோறும் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று அசாம்.

ஆற்றுப் பள்ளத்தாக்குகளால் ஆனது அசாமின் பெரும்பாலான நிலப்பரப்பு. பிரம்மபுத்திரா, பராக் ஆகிய இரண்டு ஆறுகள், 48 பெரிய துணை ஆறுகள், ஏராளமான கிளை ஆறுகளின் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது அசாம் மாநிலம். பிரம்மபுத்திரா, ஆண்டுதோறும் அதன் கரைகளை அரித்து வருவதால், அசாமின் நிலப்பரப்பு அதிகளவு கரைந்து ஆற்றுக்குள் கொண்டிருக்கிறது ...

இதன் காரணமாக, 100 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஐந்து கிலோ மீட்டர் அகலம் கொண்டிருந்த பிரம்மபுத்திரா ஆற்றின் தற்போது அகலம் சுமார் 15 கிலோ மீட்டர். ஆண்டுதோறும், தனது சொந்த கரையோரங்களையே கபளீகரம் செய்கின்றன பிரம்மபுத்திராவும், அதன் துணை ஆறுகளும்.

இதனால், 2010 முதல் 2015க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் ஆற்றில் முற்றிலும் அரித்துச் செல்லப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 880. இவ்வாறு, அசாம் மாநிலம் ஆண்டுதோறும் ஆற்றில் இழப்பது சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலம். அதே நேரத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் எண்ணிக்கையின் அதிகரித்துள்ளது கடந்த அரை நூற்றாண்டில்.

இந்த சூழலில் இந்த ஆண்டும் அசாமில் வெளுத்து வாங்கியுள்ளது கனமழை. அதன் காரணமாக ஆறுகளில் மட்டுமின்றி, அத்தனை இடங்களிலும் ஏற்பட்டுள்ளது வெள்ளப்பெருக்கு.கரைபுரளும் ஆறுகளால், கடல்போல் காட்சியளிப்பதோடு, வெற்றிடங்கள் எதையும் விட்டுவைக்காமல் பாய்கிறது வெள்ளம்.

கரைகளை உடைத்துக் கொண்டு ஓடும் வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கும் மக்களோடு, ஆபத்தை உணராமல் அங்கேயும் செல்ஃபி எடுக்கிறார்கள் இளைஞர்கள். வயல்வெளிகளையும் வளைத்திருக்கும் வெள்ளத்தால், அத்தனை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக, கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்...

நெடுநெடுவென வளர்ந்து, அறுவடைக்கு தயாராக நின்ற நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால், படகுகளில் சென்று அவற்றை அறுவடை செய்கின்றனர் சில விவசாயிகள். தரைப்பாலங்களை உடைத்துக் கொண்டு தாழ்வான இடங்களை நோக்கி பாயும் தண்ணீரால், எங்கெங்கு காணினும் சூழ்ந்துள்ளது வெள்ளம்.

Also Read:  Assam Floods: கனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம் - 2 லட்சம் பேர் பாதிப்பு, 7 பேர் பலி

ஊருக்குள் வெள்ளம் வருவதைத் தடுக்க, கையில் கிடைத்த மூங்கில் மரங்களால் கரைகளை பலப்படுத்தத் தொடங்கினார்கள் மக்கள். ஆனாலும், மூர்க்கமாக பாய்ந்து வரும் தண்ணீரால், அசாமில் அதிகமாக காணப்படும் பாக்குத் தோட்டங்களில் கரைபுரளுகிறது வெள்ளம்.

வீதிகளில் பாய்ந்தோடும் வெள்ளத்தால், பல வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், பரிதவிக்கும் மக்கள், கிடைக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.. மூங்கில் மரங்களையே படகாக்கி, அதில் பெண்களையும், குழந்தைகளையும் வைத்துக் கொண்டு, பயணப்படுகிறார்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி. அதிக ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை, மீட்புப் படையினர் ஒருபுறம் மீட்க, மறுபுறம் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர் மக்கள்

தொடர் மழையால் ஆறுகளில் பாய்ந்தோடும் வெள்ளத்தோடு, மலைகளில் ஏற்பட்டுள்ளது மண் சரிவு. மறுபுறம் சாலைகளில் சரிந்துள்ள மரங்களை அகற்றும் பணியிலும் அயராது ஈடுபட்டு வருகிறார்கள் தொழிலாளர்கள். எங்கெங்கு காணினும் காணப்படும் வெள்ளம், காடுகளை விட்டு வைக்கவில்லை. இதனால், அங்கிருந்து அச்சத்துடன் வெளியேறி வருகின்றன யானைகள்.

பல இடங்களில் வெள்ளம் வடியாததால், அப்பகுதிகளில் பாசி படந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன. இப்படியாக, திரும்பும் திசையெல்லாம் காணப்படும் வெள்ளத்தால், 20 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 2 லட்சம். அத்துடன் அங்கு வெள்ளத்தால் மூழ்கி, பாதிக்கப்பட்டது 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள். ஆண்டுதோறும் தொடரும் இந்த துயரத்தை துடைக்க, இனியாவது அசாம் அரசு ஏதாவது செய்தாக வேண்டியது அவசியம். அப்படி செய்யாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில், அசாம் மாநிலம் மிஞ்சுவதற்கு வாய்ப்பே இல்லை.

First published:

Tags: Assam, Flood, Flood warning, Heavy rain, Heavy Rainfall