முகப்பு /செய்தி /இந்தியா / அசாம் , மேகாலயாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை - 6 மாத குழந்தை உட்பட 31பேர் உயிரிழப்பு

அசாம் , மேகாலயாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை - 6 மாத குழந்தை உட்பட 31பேர் உயிரிழப்பு

அசாம் வெள்ளம்

அசாம் வெள்ளம்

Assam floods : கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன.

  • Last Updated :

அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கொட்டி வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அங்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. ஹோஜாய், நல்பாரி, பஜாலி, உள்ளிட்ட அசாமின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுமார் 3,000 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 19 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்துகளில், இரண்டு நாட்களில் மட்டும் அசாமில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 43,000 ஹெக்டேருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.இதனிடையே, காம்ருப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவிற்கு தேங்கிய வெள்ள நீரில், பொதுமக்கள் வலைகளை வீசி மீன்பிடித்தனர்.

மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், நீரில் மூழ்கிய மூன்று குழந்தைகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்நிலையில், தர்ராங் மாவட்டத்தில் உள்ள சக்டோலா ஆற்றின் வெள்ளப்பெருக்கால், உடைந்த கரைப்பகுதியை முதலமைச்சர் ஹிமந்த் பிஷ்வா சர்மா ஆய்வு செய்தார், சேதமடைந்த கரை விரைந்து சீரமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Also Read:  மூதாட்டியை மிதித்து கொன்றும் ஆவேசம் தீராத யானை.! இறுதி சடங்கின் போதும் விடாமல் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

மேகாலயாவிலும் கனமழை கொட்டி வரும் நிலையில், இரண்டு நாட்களில் 19 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். டங்கர் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த, 6 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாயை உதவித்தொகையாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 1940-ம் ஆண்டிற்கு பிறகு இல்லாத அளவிற்கு, மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சியில் கனமழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழைவெள்ளத்தால் 40,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரிபுராவிலும் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தலைநகர் அகர்தலாவில் 6 மணி நேரத்தில் 145 மில்லி மீட்டர் கனமழை பெய்தது. கடந்த 60 ஆண்டுகளில் அகர்தலாவில் பதிவான மூன்றாவது அதிகபட்ச மழை இது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழைநின்றாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக, அசாம் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.

First published:

Tags: Assam, Flood, Flood alert