Home /News /national /

வடியாத வெள்ளத்தால் வாடும் அசாம் மக்கள்- ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம்

வடியாத வெள்ளத்தால் வாடும் அசாம் மக்கள்- ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம்

அசாம் வெள்ளத்தில் 8 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் வெள்ளத்தில் 8 லட்சம் பேர் பாதிப்பு

Assam Flood : அசாமில் மழை வெள்ளத்தில் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 25ஐ தாண்டியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ளன. நகவோன் மாவட்டம் தான் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வெள்ளத்தில் 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக களமிறங்கியுள்ள ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இதுவரை 21,884 பேரை மீட்டுள்ளனர்.அங்குள்ள திமா ஹசாவோ மாவட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அம்மாவட்டத்தின் சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்திய விமானப்படையின் ஹெலிக்காப்டர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

    ஜமுனாமுக் மாவட்டத்தில் சாங்குராய் மற்றும் படியா ஆகிய இரு கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியதால் இந்த இரு கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க 411 மையங்களை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது. பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், பிரம்மபுத்திரா, கோபிளி, திசாங் ஆகிய நதிகள் அபாய கட்டத்தை எட்டியுள்ளன.

    இதையும் படிங்க: பெண் மருத்துவர் வழக்கில் நடந்தது போலி என்கவுன்ட்டர்.. சிறார்கள் கொல்லப்பட்டதாக அறிக்கை தாக்கல்.. சிக்கலில் போலீஸ் - நடந்தது என்ன?

    கச்சார் மற்றும் திமா ஹசாவோ ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திமா ஹசோ, கார்பி, ஹோஜாய் மற்றும் கச்சார் ஆகிய மாவட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நான்கு நாள்களுக்கு இலவச அழைப்புகள், இன்டெர்னெட், எஸ்எம்எஸ் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அசாம் மட்டுமல்லாது மழையால் பாதிக்கப்பட்ட மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் இந்த சிறப்பு சலுகை திட்டத்தை ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assam, Disasters, Flood alert

    அடுத்த செய்தி