அசாம் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ரூ.110 கோடி பறிமுதல்!

அசாம் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ரூ.110 கோடி பறிமுதல்!

2021 அசாம் சட்டமன்ற தேர்தல்

அசாம் தேர்தல் வரலாற்றில் 110 கோடி ரூபாய் மதிப்பிலானவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

  • Share this:
 

அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த மார்ச் 27ம் தேதி 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று 2ம் கட்டமாக 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நிதின் கடே, ரொக்கம், மதுபானம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதலில் முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவர் பேசுகையில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது ஒட்டுமொத்தமாகவே 20 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பறிமுதல் நடவடிக்கை இருந்த நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி இன்றைய தேதி (மார்ச் 31) வரையில் அசாமில் 110.83 கோடி மதிப்பிலானவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 33.44 கோடி ரூபாய் மதிப்பில் 16.61 லட்சம் லிட்டர் மதுபானம், 24.50 கோடி ரூபாய் ரொக்கம், 34.29 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்கள், 3.68 கோடி ரூபாய் மதிப்பில் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அசாம் காவல்துறையினர், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுக்கள், கலால் மற்றும் பிற அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை முகமைகள் மூலம் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 14.91 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள், மிளகு, கசகசா விதைகள், பான் மசாலா போன்ற இலவசமாக வழங்கப்படவிருந்த பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக நிதின் கடே கூறினார்.

மாநிலம் முழுவதும் கலால் விதிகளை மீறுதல் தொடர்பாக 5,234 வழக்குகள், தேர்தல் செலவு விதிகளை மீறியதாக 50 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நிதின் கடே, இந்த வழக்குகளில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.

மாநிலம் முழுதும் 756 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நிதின் கடே, கடந்த தேர்தலில் சுமார் 20 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலேயே பறிமுதல் நடவடிக்கைகள் இருந்ததாக குறிப்பிட்டார்.
Published by:Arun
First published: