HOME»NEWS»NATIONAL»as culling begins kerala declares bird flu as state disaster vai
Bird Flu | கேரளாவில் பறவை காய்ச்சல்.. மாநில பேரிடராக அறிவிப்பு.. 40,000 பறவைகளை கொல்ல அரசு முடிவு
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் அபாயம் இருப்பதால், அதை மாநில பேரிடராக அறிவித்து, கண்காணிப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இமாச்சலபிரதேச மாநிலம் போங் டாம் ஏரியில், புலம் பெயர்ந்த இரண்டாயிரத்து 400க்கும் மேற்பட்ட பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. பறவைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த போது, அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா, பறவைகள் உயிரிழப்பு குறித்து, உச்சபட்ச எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுதவிர ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டத்தில், 50 காக்கைகள் மற்றும் புறாக்கள் உயிரிழந்த நிலையில், அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவற்றை கொல்ல அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி உள்ளிட்ட பறவைகள், கோழி தீவனம், முட்டை ஆகியவற்றை கொண்டு வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் ஆபத்து இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதால், இதை மாநில பேரிடராக அரசு அறிவித்துள்ளது.