இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் அக்டோபர் 2-ம் தேதி மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர். கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்த அதிகாரிகள் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யான் கானிடம் விசாரணை நடத்திய தேசிய போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை அக்டோபர் 8-ம் தேதி மும்பை ஆர்துர் சாலை சிறைச்சாலையில் அடைத்தனர். ஜாமின் கோரி ஆர்யான் இரண்டு மனுத் தாக்கல் செய்த நிலையில் இரண்டுமுறை அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆர்யான் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆர்யான் கானிடம் தடைசெய்யப்பட்ட போதை மருந்து இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.
என்.சி.பி சார்பில், ‘ஆர்யான் கானின் வாட்ஸ் அப் சாட் போதைப் பொருள் பயன்படுத்தலில் ஆர்யான் கானுக்கும் தொடர்பு உள்ளது’ என்று வாதிட்டனர். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ‘ஆர்யான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். அதேபோல, ஆர்யான் கானின் நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மன்மம் தாமேசா ஆகிய இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆர்யான் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதையும், அவரிடம் போதைப் பொருள் இருந்ததையும் உறுதிப்படுத்தாத நிலையில் அவருக்கு ஜாமின் வழங்காத விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.