டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பொருள் வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் சற்று கவனமாகவே செயல்பட வேண்டியிருக்கிறது. முகம் அறியாதவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட கவனமுடனே கையாளவேண்டியிருக்கிறது. இவ்வாறான சூழலில் சைபர் க்ரைம் குற்றங்களை அரங்கேற்றுவதற்காக உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஹேக்கர்கள், மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.
பிக் பாக்கெட், திருட்டு, கொள்ளை இது போன்ற குற்றச் செயல்கள் நடைபெற்றால் இதில் தொடர்புடையவர்களை கண்டறிவது எளிதாகவே விளங்கினாலும், ஆன்லைனில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.
எனவே ஆன்லைனில் பொருள் விற்பது/வாங்குவதில் அதிகபட்ச கவனம் அவசியமாகிறது.
நிலைமை இப்படி இருக்க ஆன்லைன் மோசடிக்கு இரையாகி இருக்கிறார் டேல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா
கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தளமான OLX-ல் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனை பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் QR code லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
மோசடி நபரின் செயல் குறித்து டெல்லி சிவில் லைன் காவல்நிலையத்தில் ஹர்ஷிதா புகார் அளித்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி முதல்வரின் மகளிடமே ஆன்லைனில் மோசடி நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவனமும் பெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.