மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி, ஓராண்டு முடிவதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது எப்படி..?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அரியணை ஏறியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த அக்கட்சி, ஓராண்டு முடிவதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட போதும், பா.ஜ.க எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றவில்லை. காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தை கூட பெற முடியாமல் படுதோல்வியைத் தழுவியது. அரவிந்த் கெஜ்ரிவால் என்ற ஒருவரை மட்டுமே முன்வைத்து, ஆம் ஆத்மி பரப்புரையை மேற்கொண்டது.
அதுமட்டுமின்றி மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வியைப் பாடமாக எடுத்துக்கொண்டு, வெற்றிக்கு திட்டமிட்டது ஆம் ஆத்மி கட்சி. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தவித்த ஆம் ஆத்மி கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
அதேபோல் மத்திய அரசு மீது பெரிதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், தான் மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகளை மட்டுமே முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி பிரசார வியூகம் அமைத்தது. பாஜகவுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். ஷாகீன் பாக் போராட்டக்காரர்களைத் சுட்டுத்தள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது சென்றது. எனினும் தனது திட்டங்களை மட்டுமே முன்வைத்த ஆம் ஆத்மி, கிட்டத்தட்ட கடந்த தேர்தலுக்கு இணையான வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.