பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தால், அவருடன் விவாதம் நடத்த தயார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, சிஏஏ குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பரப்புரை களம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பணியின் போது துப்புரவு தொழிலாளிகள் உயிரிழக்க நேர்ந்தால், அவர்களது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசபக்தியை வளர்க்கும் பாடத்திட்டங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த முயற்சி மாணவர்களிடையே தேசிய உணர்வையும், ஆயுதப்படையினர் மீதான நேசத்தையும், மூவர்ணக் கொடியின் மீதான மரியாதையையும் வளர்த்தெடுக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தால், புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அவரோடு விவாதம் நடத்த தான் தயார் என சவால் விடுத்தார்.
இதனிடையே, சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து பேசி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று ஷாகீன் பாக் காலி செய்யும் பணி தொடங்கும் என பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது நாளாக பங்கேற்று பேசினார். அப்போது குடியுரிமை சட்டதிருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி, பதற்றத்தைத் தூண்டுவதாக தெரிவித்தார். வெறுப்பரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.