முகப்பு /செய்தி /இந்தியா / எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு - வீடியோ வெளியிட்ட ராணுவம்

எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டியடிப்பு - வீடியோ வெளியிட்ட ராணுவம்

News18

News18

  • Last Updated :

இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மும்பை தொடர் தாக்குதலை போல மேலும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பாகிஸ்தான் - இந்தியா எல்லைப்பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டரன் பகுதியில், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து டார்ன் டரன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த தாக்குதல் சதியில், ஜெய்ஷ் இ முகமது மற்றும் காலிஸ்தான் ஜிந்தாபாத் போர்ஸ் எனப்படும் கேஇசட்எஃப் அமைப்பினரும் கூட்டாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கேஇசட்எஃப் என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனியில் இருந்தும், ஜெய் ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்தும் இயங்கி வருகின்றன.

எல்லைப்பகுதியில் உள்ள மஹாவா என்ற கிராமத்தில் இருந்து ஒரு ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது.  இந்த ஆளில்லா விமானம் பயங்கரவாதிகள் அனுப்பிய 4 ஆளில்லா விமானங்களில் ஒன்றா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள், பாகிஸ்தானில் இருந்து 8 முதல் 10 முறை வந்துள்ளதும் பஞ்சாப் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜுலை 30-ம் தேதி ஊடுருவிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டவுடன், துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

top videos

    இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி முழுவதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எல்லை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    First published:

    Tags: Jammu and Kashmir