நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், அதில் பயணித்தவர் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்.
மொத்தம் 14 பேர் ஹெலிகாப்டரில் இருந்த நிலையில், அவர்களில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி என்ன ஆனார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ராணுவத்தில் உச்சபட்ச பொறுப்பில் இருக்கும் ஒருவர் செல்லும் ஹெலிகாப்டர், எத்தகைய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விபத்தை சந்தித்த ஹெலிகாப்டர் Mi 17V5 என்ற வகையை சார்ந்தது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் ராணுவ துருப்புகளை இடமாற்றம் செய்வது, கண்காணிப்பு பணிகள், பேரிடரின்போது மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
பாலைவனம், கடல் மேற்பரப்பு, வெப்பமண்டலம், குளிர் பகுதிகள் என எந்த கால நிலையையும் எதிர்கொண்டு, பயணிக்கும் ஆற்றல், இந்த ஹெலிகாப்டருக்கு உண்டு.
Also Read : பிபின் ராவத் டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல், விபத்தை சந்தித்தது வரை நடந்தது இதுதான்...
அதிகபட்சமாக 13 ஆயிரம் கிலோ எடையை எம்.ஐ. 17-ல் ஏற்றிக் கொள்ள முடியும். 36 பேர் வரை அமர்ந்து செல்லும் இந்த ஹெலிகாப்டரில் இன்று, தலைமை தளபதி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
ஸ்லைடிங் கதவு, பாராசூட், அதிநவீன தேடுதல் கருவிகள், எமர்ஜென்சி ஏற்பட்டால் தண்ணீர் (கடல் )பரப்பில் மிதக்கும் வசதி, நைட் விஷன், ரேடார், தானியங்கி பைலட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இந்த ஹெலிகாப்டரில் இடம்பெற்றுள்ளன.
மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர், 6 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும் திறன் கொண்டது.
Also Read : ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?
தாக்குதலை பொருத்தவரையில், Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23mm மெஷின் துப்பாக்கி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் துப்பாக்கிகளை, ஹெலிகாப்டரில் இருந்தவாறே கையாள முடியும். ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க், வெடித்து சிதறாத அளவுக்கு வேதியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும், எதற்காக விபத்து ஏற்பட்டது என்றுதான் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. நேரில் பார்த்தவர்கள், ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக சென்றதாக கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் ரோசோபோரான் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம்தான் Mi 17V5 ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்கியது. 2008-ல் 80 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அவை 2013-ல் டெலிவரி முழுமையாக செய்யப்பட்டன. தற்போது இதே ரக ஹெலிகாப்டா 71 எண்ணிக்கையில் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.