குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்.
துடிப்பும், திறமையும் கொண்ட அருண் சிங், தனது வீர தீரத்திற்காக சுதந்திர தினத்தன்று சவுர்யா சக்ரா பதக்கத்தை பெற்றுள்ளார். தன்னலமற்ற சேவை, துணிச்சலாக செயல்பட்டு பேரிழப்பை தவிர்த்தது ஆகிய காரணங்களுக்காக, இந்த பதக்கம் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும்.
Also Read : விபத்துக்குள்ளான Mi 17 V5 ஹெலிகாப்டர் இவ்வளவு பாதுகாப்பை கொண்டதா? வியக்கவைக்கும் தகவல்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம்தேதி, இலகு ரக போர் விமானத்தில் (LCA)சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த நெருக்கடியான தருணத்தில், கவனமாக செயல்பட்ட வருண் சிங், விமானத்தை சரி செய்து தரையிறக்க முற்பட்டார்.
விமானம் தரையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு பாதிப்பு இந்திய விமானப்படை வரலாற்றிலேயே ஏற்பட்டது இல்லை என்று பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
இரண்டாவது பாதிப்பையும் சரி செய்த வருண், விமானத்தை பத்திரமாக இறக்க முற்பட்டார். மீண்டும் 10 ஆயிரம் அடி உயரத்தில், மற்றொரு கோளாறு ஏற்பட, கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். அந்த நேரத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் வருணுக்கு ஏற்பட்டது. இருப்பினும், சாதுரியமாக செயல்பட்ட வருண், போர் விமானத்தை எந்த சேதமும் இல்லாமல் தரையிறக்கினார்.
Also Read : பிபின் ராவத் டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல், விபத்தை சந்தித்தது வரை நடந்தது இதுதான்...
வருணின் திறமையை பார்த்த விமானப்படை உயர் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். அவரை வீர தீரத்திற்கான சவுர்யா விருதுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். விருது வருணுக்கு கடந்த சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
அத்தகைய வீரர்தான் இன்றைக்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதிலும் வெற்றி பெற்று மீண்டும் விமானப்படைக் களத்திற்கு திரும்புவார் என்று நம்புவோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.