ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் நடைபெற்ற என்கவுண்டர்களில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோல்ப் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் சவுகத் அகமது ஷேக் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சவுகத் அகமது ஷேக் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர். ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற IED வெடிகுண்டு சம்பவத்தில் இவர் காவல்துறையினரால் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த மற்ற பயங்கரவாதிகளின் இருப்பிடத்தில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த என்கவுண்டரில் அங்கு பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அத்துடன் கைதான பயங்கரவாதி சவுகத் அகமது அங்கு நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் இரண்டாவது என்கவுண்டர் நடைபெற்றது. இதில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மூன்றாவதாக, ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் சட்போரா என்ற கிராமத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 114 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இதில் 32 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள்.
இதையும் படிங்க:
அக்னிபத் போராட்டம் எதிரொலி - அக்னிவீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக இரு தொழிலதிபர்கள் உறுதி
இந்த பயங்கரவாத தடுப்பு என்கவுண்டர் நடவடிக்கை மேலும் தொடரும் என ஜம்மு காஷ்மீர் காவல் தலைவர் விஜய் குமார் கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அமைதியை சீர்குலைக்க முயல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.