ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஸ்பெஷல் பர்மிட் இன்றி கோவா செல்கிறீர்களா? - ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த தயாராக இருங்கள்

ஸ்பெஷல் பர்மிட் இன்றி கோவா செல்கிறீர்களா? - ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த தயாராக இருங்கள்

Goa Police

Goa Police

Goa Tourism | சுற்றுலா செல்லும் ஆர்வத்தில், கோவா எல்லையை கடப்பதற்கான ஸ்பெஷல் பெர்மிட் நீங்கள் பெறவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் வரையில் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஏறக்குறைய ஏப்ரல் மாதம் நிறைவடைய இருக்கிறது. மே மாதம் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில், கோடைகால சுற்றுலா செல்ல நீங்கள் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளிலும் மே மாதம் என்பது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கடந்து போயிருக்கும்.

இத்தகைய சூழலில், பெரும் எதிர்பார்ப்புடன் நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதுவும், குதூகலம் நிறைந்த கோவா செல்ல நீங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான எச்சரிக்கை தகவல் இந்தச் செய்தியில் இருக்கிறது. அதாவது, சுற்றுலா செல்லும் ஆர்வத்தில், கோவா எல்லையை கடப்பதற்கான ஸ்பெஷல் பெர்மிட் நீங்கள் பெறவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் வரையில் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.

அபராதம் கட்டிய 40 டாக்ஸிகள்

கடந்த வாரத்தில் பெங்களூருவில் இருந்து கோவா நோக்கி சென்ற வாகனங்களில் 40 டாக்ஸிகள் இந்த ஸ்பெஷல் பெர்மிட் பெறவில்லை என்பதால் ரூ.10,000 அபராதம் கட்டியுள்ளன. பெங்களூரு மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள கர்நாடக மாநில போக்குவரத்து ஆணையரக அலுவலகம், நீண்ட வார விடுமுறையை ஒட்டி திறக்கப்படவில்லை என்ற சூழலில், வாகன ஓட்டிகள் அந்த ஸ்பெஷல் பர்மிட் பெற முடியவில்லை. இது மட்டுமல்லாமல், இந்த ஸ்பெஷல் பெர்மிட்டை ஆன்லைன் மூலமாக வழங்கும் வசதி கர்நாடக அரசிடம் இல்லை.

வெறும் ரூ.100 அல்லது ரூ.200 - தவறினால் ரூ.10 ஆயிரம்

பொதுவாக கோவா செல்லும் வாகனங்களுக்கான ஸ்பெஷல் பர்மிட் தொகை என்பது ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே. பெங்களூரு மாநகரின் சாந்திநகர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இங்கு விடுமுறை என்பதால், கோவா செல்லும் போது நேரடியாக சோதனைச் சாவடிகளில் இந்த பர்மிட் பெற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் வாகன ஓட்டிகள் சென்று விட்டனர்.

ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே, சோதனைச் சாவடியில் பர்மிட் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இது தெரியாமல் சென்று சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

வாகனத்திற்கு தகுந்தாற்போல அபராதம்

வாகனம் எந்த அளவுக்கு பெரியது என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்ஸி என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், வேன் என்றால் ரூ.17,000 அபராதம் என்றும் வசூலிக்கப்படுகிறது. அதுவே, டூரிஸ்ட் பஸ் ஒன்று பெர்மிட் இல்லாமல் வந்தால் ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டும்.

இனி ஆன்லைனில் பெறலாம்

இதற்கிடையே ஸ்பெஷல் பர்மிட்டுகளை ஆன்லைன் மூலமாக வழங்கும் நடவடிக்கையை கர்நாடக மாநில அரசு தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சோதனைச் சாவடிகளில் இதற்கான இணைப்பு வசதி இல்லை. எனினும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Published by:Elakiya J
First published:

Tags: Goa, Tour, Tourism