• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கனவு நாயகன் கலாமிற்கு இன்று பிறந்தநாள்

கனவு நாயகன் கலாமிற்கு இன்று பிறந்தநாள்

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

  • News18
  • Last Updated :
  • Share this:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்தியாவின் தெற்கு எல்லையான ராமேஸ்வரம் தீவில் ஒரு சிறுவன் கிணற்றுக்குள் கல்லை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். கிணற்றுக்குள் கல் விழுந்ததும் குமிழ்கள் எழுந்துள்ளன. ஏன் குமிழ்கள் எழுகிறது அந்த சிறுவன் கேள்வி கேட்டுள்ளார். இந்தியாவாலும் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முடியும் என்று பின்னாளில் உலக நாடுகளை ஆச்சரியத்துடன் நம்பவைத்த ஏவுகனை விஞ்ஞானி தான் அந்தச் சிறுவன். தமிழில் கல்வி பயின்று, விஞ்ஞானத்தில் சாதனைகளைப் படைக்க முடியும் என்று இளைஞர்களுக்கு தன் வாழ்க்கை மூலம் பாடம் நடத்திச் சென்றவர் அப்துல் கலாம் ஆவார்.

இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகணை விஞ்ஞானி, மக்களின் தலைவர், சிறந்த நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7-வது மகனாக பிறந்தவர் அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.

மேலும் கலாம் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அவர் அறியப்பட்டார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.

இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002-ம் ஆண்டு ஜூலை 260-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத்தலைவராக பதவியேற்றார். தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். குழந்தைத்தனமான குரல் வளத்தை கொண்டிருந்த கலாம், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

2015-ம் ஆண்டு, ஜூலை 27-ம் தேதி 'அருமை மாணவர்களே’ என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம்.

தேசத்தின் சிறந்த தவப்புதல்வனாக கருதப்படும் அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இராமேஸ்வரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் உள்பட பல தலைவர்கள் மற்றும் பொது மக்களும் காலை முதல் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வணங்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: