மூழ்கிய கப்பல்.. கடலில் 9 மணிநேர போராட்டம் - மெக்கானிக்கல் என்ஜினியரின் திக் திக் நிமிடங்கள்

Anil Waychal

கடலில் இருந்த 9 மணிநேரமும் மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பெரிய அலைகள் வீசும்போது கண்கள் மற்றும் வாய்ப்பகுதியில் தண்ணீர் புகுந்துவிடும்.

 • Share this:
  டவ்-தே புயல் காரணமாக கடலில் அடித்துச்செல்லப்பட்ட ஓஎன்ஜிசி கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் கடலில் இருந்த திக் திக் நிமிடங்களை விவரித்துள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனில் வேச்சல் (Anil Waychal) கடுமையான கடல் காற்றுக்கு மத்தியில் தனது குழுவினருடன் கடலில் தத்தளித்துள்ளார். மே 17-ம் தேதி காலை 2 மணிக்கு அவர்களது கப்பல் தாக்கப்பட்டது. மே 18-ம் தேதி அவர்கள் மீட்கப்பட்டனர். கப்பல் மூழ்கியதையடுத்து இவர்கள் கடலில் குதித்து மீட்புப்படையினருக்காக காத்திருந்தனர்.

  இதுகுறித்து அவர் பேசுகையில், ” அந்த 9 மணிநேரத்தை என் வாழ்நாள் போல் உணர்ந்தேன். நான் என்னுடைய குடும்பத்தினரை மீண்டும் சந்திப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் பிழைத்துக்கொள்வேன் என என்னுடைய உள்ளுனர்வு கூறியது. என்னுடன் பணியாற்றியவர்களுக்கு நான் தைரியம் சொன்னேன். நாம் பிழைத்துக்கொள்வோம். நம்முடைய குடும்பத்தினரை மீண்டும் பார்ப்போம் என கூறினேன். எனக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியாது.

  Also Read: பெண்ணை கொலை செய்துவிட்டு விபத்து போல் சித்தரிப்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா- திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  கப்பல் மூழ்கத் தொடங்கியதும் எங்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லை. கடலில் குதித்தாக வேண்டும். நாங்கள் ஒரு பெரிய குழுவாக கடலில் குதித்தோம். ஏனென்றால் அப்போதுதான் நாங்கள் மீட்கப்படுவோம். லைப் ஜாக்கெட்டுடன் கடலில் குதித்தோம். நாங்கள் 2- 3 பேர் ஒரு குழுவாக இணைந்தோம். கைகளை இறுக்க பற்றிக்கொண்டு அந்த அலைகளுக்கு மத்தியில் மிதக்கத் தொடங்கினோம். நாங்கள் எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் குழுவை பார்ப்போம் வலுவான நீரோட்டம் காரணமாக அவர்கள் மறைந்துவிடுவார்கள்.

  கடலில் அலையான 7 முதல் 8 மீட்டர் உயரத்துக்கு எழும். அந்த அலை எங்களை அடித்துச்செல்லும். நாங்கள் தனித்தனியாக பிரிக்கப்படுவோம். மீண்டும் ஒரு குழுவான இணைவோம். கடலில் இருந்த அந்த 9 மணி நேரத்தில் நான் 3-4 குழுக்களில் இணைந்திருப்பேன். கடலில் இருக்கும் நமக்கு எதுவும் தெரியாது எல்லாம் தண்ணீராகத்தான் இருக்கும். ஆனால் மீட்புப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நாம் இப்படி குழுவாக இருந்தால் புள்ளி புள்ளியாக தெரிவோம். அவர்கள் நம்மை நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  Also Read: ஊரடங்கில் மருந்து வாங்க சென்ற இளைஞர்.. போனை பிடுங்கி கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் - வைரலாகும் வீடியோ

  கடலில் இருந்த 9 மணிநேரமும் மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பெரிய அலைகள் வீசும்போது கண்கள் மற்றும் வாய்ப்பகுதியில் தண்ணீர் புகுந்துவிடும். இதன்காரணமாக தெளிவாக பார்க்கமுடியாது. நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தேன். நான் மூக்கு வழியாக சுவாசிக்க கூடாது என முடிவு செய்தேன். மூக்கு வழியாக சுவாசித்தால் தண்ணீர் நுரையீரலுக்கு செல்லும் அபாயம் உள்ளது. வாய் வழியாக சுவாசிக்க ஆரம்பித்தேன். தண்ணீர் வாய் பகுதியில் சென்றால் பெரிய பிரச்னைகள் ஏற்படாது என்பது எனக்கு தெரியும். கடற்படையினர் வந்தபின்னர் நாங்கள் மீட்கப்படுவோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

  அப்போது சில சவால்கள் காத்திருந்தது. என்னால் மீட்புப்படகில் ஏற முடியுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் காற்று மிகவும் பலமாக இருந்தது. உடலிலும் வலு இல்லை. அது பெரிய கப்பல் ஆனால் நான் இரண்டு முறை முயற்சி செய்தும் என்னால் ஏற முடியவில்லை. சாலைகளை போல் கப்பலை உடனே திருப்ப முடியாது. நான் மூன்றாவது முயற்சியில்தான் கப்பலில் ஏறினேன். நான் ஏறும் நிலையில் இல்லை. நான் எப்படியோ வலையில் சென்றேன். மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களிடம் என்னை தயவுசெய்து தூக்குங்கள் எனக் கூறினேன். 13 நண்பர்கள் இருந்தார்கள். அதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிலர் இறந்துவிட்டனர். மீதமுள்ள நபர்களை காணவில்லை.

  வாழ்நாள் முழுவதும் என் நண்பர்களை நினைவில் வைத்துக்கொள்வேன். என் உணவுகளை பகிர்ந்துக்கொண்டது. அவர்களுடன் அரட்டை அடித்த நாள்களை நினைவில் வைத்திருப்பேன். என் குடும்பத்தினரின் பிரார்த்தனை மற்றும் கடவுளின் ஆசிர்வாதம் காரணமாக நான் மீண்டும் திரும்ப வந்துவிட்டேன். என் நண்பர்களின் குடும்பத்துக்கு நான் என்ன சொல்வேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கடவுள்தான் அவர்களுக்கு வலிமையை கொடுக்க வேண்டும்” என கனத்த குரலில் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: