ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தற்போது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் டெல்லியில் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அந்த கருத்தரங்கில் ராஜன் பேசுகையில், சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா மீதான உருவாகும் பிம்பம் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளார்.
இந்தியா குறித்து உலக சந்தையில் நல்ல மதிப்பை ஏற்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமாகும். அனைத்து குடிமக்களையும் சமமாக மதிக்கும் ஜனநாயக நாடாக இந்தியாவை உலக நாடுகள் மதிக்க வேண்டும். இது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு அடிப்படை. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா மீது உருவாகும் பிம்பம், இந்தியாவின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களை அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார்.
மேற்கத்திய நாடுகளின் மனநிலையை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். உக்ரைன் நாடு ஜனநாயக விழுமியங்களை பின்பற்றுவதால், அந்நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவை அள்ளிதருகின்றன. அதேவேளை, உய்கர் மற்றும் திபெத் சிறுபான்மை மக்களை முறையாக நடத்தாத சீனா மீது இந்நாடுகள் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே, சேவைத்துறையில் சர்வதேச அளவில் இந்தியா கொண்டிருக்கும் வாய்ப்பை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.அமலாக்கத்துறை, சிபிஐ போன்று அமைப்புகள் இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை தகர்த்துவருகின்றன என்றார்.
அன்மையில், ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற மத ஊர்வலங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரம் ஆனது.தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்பூரியில் நடைபெற்ற மத மோதல் பதற்றத்தை உருவாக்கியது. இதையடுத்து டெல்லி மாநகராட்சி அங்குள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை புல்டோசர் வைத்து இடிக்கத் தொடங்கியது. இதில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களை சேர்ந்தவை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்தே இதுபோன்ற கருத்தை ரகுராம் ராஜன் தற்போது தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதலை அமெரிக்கா கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருந்தார்.
Published by:Kannan V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.