பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டின் அரசு துறைகளில் மெகா வேலை நியமன அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பாஜக தலைவர்கள் புகழ்ந்து பாராட்டி வரவேற்பு தந்து வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இந்த அறிவிப்பை விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலை தரப்படும் என இளைஞர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல் தான், தற்போதும் 10 லட்சம் அரசு வேலை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது ஜும்லா அரசு இல்லை, மகா ஜும்லா அரசு ஆகும். பிரதமர் வேலைகளை உருவாக்குவதில் அல்ல, வேலை தொடர்பான செய்திகளை உருவாக்குவதில் நிபுணர்' என பதிவிட்டுள்ளார்.
जैसे 8 साल पहले युवाओं को हर साल 2 करोड़ नौकरियों का झांसा दिया था, वैसे ही अब 10 लाख सरकारी नौकरियों की बारी है।
ये जुमलों की नहीं, 'महा जुमलों' की सरकार है।
प्रधानमंत्री जी नौकरियां बनाने में नहीं, नौकरियों पर 'News' बनाने में एक्सपर्ट हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) June 14, 2022
ஜும்லா என்ற பதத்திற்கு பொய்யுரை எனப் பொருள். பிரதமர் மோடியை 'ஜும்லா'பேச்சாளர் என காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பும் பிரதமர் மோடியின் மற்றொரு பொய்யுரை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Modi, Rahul gandhi