சோனாலி குகா மற்றும் சரளா முர்மு ஆகியோருடன் தற்போது பாஜகவுக்குத் தாவிய தீபேந்து பிஸ்வாசும் மீண்டும் திரிணாமூல் கதவைத் தட்டியுள்ளார். இவர்கள் தங்கள் கடிதத்தில்
மம்தாவிடம் பாஜகவுக்குத் தாவிய தங்கள் முடிவு ‘மோசம்’ என்று கூறியுள்ளனர்.
தீபேந்து பிஸ்வாஸ் மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக டிக்கெட்டுக்காக ஏங்கினார், ஆனால் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பாஜகவுக்குத் தாவியது தவறான முடிவு என்றும் கட்சியை விட்டு விலகியது உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் இதனால் செயலிழந்து விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் திரிணாமூலுக்கே திரும்புவதாகவும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பசிராத் சவுத் தொகுதிக்கு வேலை செய்வதாகவும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களோடு திரிணாமூல் கட்சியை விட்டுச் சென்ற மேலும் சிலரும் மம்தா வீட்டுக் கதவை தட்டி வருகின்றனர். காரணம் மம்தா பெற்ற மிகப்பெரிய வெற்றியே.
முன்னாள் திரிணாமூல் தலைவர் சோனாலி குகா, தான் கட்சியை விட்டு விலகி பாஜகவுக்குத் தாவியதற்கு தன் கடிதத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார். தானும் உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுத்து விட்டதாக இப்போது மம்தாவிடம் கெஞ்சியுள்ளார்.
“உடைந்த இருதயத்துடன் இதை எழுதுகிறேன். உணர்ச்சிவயப்பட்டு தவறாக வேறொரு கட்சியில் இணைந்து விட்டேன். அங்கு எனக்கு சரிப்பட்டு வரவில்லை. மீன் எப்படி தண்ணீரை விட்டு இருக்காதோ, அப்படித்தான் தீதி நீங்களும் எங்களுக்கு, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், நீங்கள் மன்னிக்கவில்லை எனில் நாங்கள் வாழ முடியாது. என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள், காலமெல்லாம் உங்கள் பாசத்தில் பிணைந்திருப்பேன்” என்று கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது கட்சித்தாவல் பற்றி பேசிய
மம்தா பானர்ஜி, “திரிணாமூல் கட்சி மக்களுக்காக உழைப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கும். மக்களுக்காக உழைக்காதவர்களுக்கு டிக்கெட் கிடையாது. இவர்கள் டிஎம்சியிலிருந்து பாஜகவுக்கு தாவுபவர்கள். பாஜகவுக்குச் செல்ல கியூவில் நிற்பவர்கள் உடனடியாக பாஜகவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.