டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை -குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி அறிவித்த விவசாயிகள்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளில் மேலும் ஒருவர் காசிபூர் எல்லையில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த 6 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 7ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசிபூர் போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போராடும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருக்கமான கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரை இழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 4ஆம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லையெனில் , பல்வேறு முற்றுகை போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத்தினர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை, போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மேலும் குடியரசு தினமான 26 ஆம் தேதி டிராக்டர்கள், டிரக்குகளில் பேரணியாக செல்ல விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அன்றைய தினம் மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.