மகாராஷ்டிர அரசை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தற்போது தனது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளில், ஒயின் மதுபானத்தை விற்பனை செய்வதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் செலுத்தி இதற்கான உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் விவசாயிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினர்களும் பலன் அடைவார்கள் என்றும், இந்திய ஒயின்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் இந்த நடவடிக்கை இளைஞர்களிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியிருந்தார். ஒயின் விற்பனை தொடர்பான அறிவிப்பை மாநில அரசு திரும்பப் பெற வலியுறுத்தி அவர், சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்... பரபரப்பு
இன்று முதல் அவரது போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், திடீரென போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 'மகாராஷ்டிர அரசின் ஒயின் கொள்கையை எதிர்த்து நான் போராட்டம் அறிவித்திருந்தேன். அதனை நான் ஒத்தி வைக்கிறேன். ஏனென்றால், எனக்கு அரசு செயலர்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அவர், ஒயின் தொடர்பான கொள்கையை நிறைவேற்றும் முன், மக்களின் முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் எனது போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது' என்றார்.
இதையும் படிங்க -
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு... நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விநியோகம்
மகாராஷ்டிராவில் கூட்டுறவு கரும்பு ஆலைகளில் ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அன்னா ஹசாரே கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்த அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.