உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ள அன்னா ஹசாரே: மத்திய அரசுக்கு கடிதம்

உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ள அன்னா ஹசாரே: மத்திய அரசுக்கு கடிதம்

 • Share this:
  விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  விவசாயிகளின் நலனுக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரே கடந்த ஆண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்நிலையில், வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி  விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களின் இந்தக் கோரிக்கைகளை மத்தய அரசு ஏற்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு அன்னா ஹசாரே அனுப்பியுள்ள கடிதத்தில், தனது கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் எனவும், இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அப்போதைய மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் மற்றும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உறுதிமொழி அளித்தனர்.

  அதனை ஏற்று, கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ள அன்னா ஹசாரே , ஆனால் மத்திய அரசு அளித்த உறுதிமொழிப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கான தேதி மற்றும் இடம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: