ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆந்திராவில் கனமழை- 17 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காணவில்லை- 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு

ஆந்திராவில் கனமழை- 17 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காணவில்லை- 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு

ஆந்திர வெள்ளம்

ஆந்திர வெள்ளம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆந்திரா மாநிலத்தில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. 17 பேர் பலியாகி உள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோரைக்  காணவில்லை. அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி திரும்பியதால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திசை மாறியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. மாறாக ஆந்திரா இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல விளைவில் சிக்கியது. இதனால் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் கன மழை பிய்த்து உதறியது.

சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆடுமாடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாகனங்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் சிக்கியதால் அதில் தவித்த 4 பேரை காப்பாற்ற 6 பேர் சென்றனர். பிறகு அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு 10 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். திருப்பதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

First published:

Tags: Andhra Pradesh, Flood, Rain