தவிடு பொடியான சொந்த வீடு கட்டும் கனவு: 5 லட்ச ரூபாயை கரையான் அரித்த கொடுமை- 10 ஆண்டு சேமிப்பு வீணான சோகம்

ரூ.5 லட்சத்தை கரையான் அரித்த கொடுமை.

கரையான் தின்ற பணத்தை எடுத்து அங்கு வீட்டருகே விளையாடும் குழந்தைகளிடத்தில் ஜமாலியா கொடுத்தார்.

 • Share this:
  ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெண் ஒருவர் சிறுகச் சிறுக 10 ஆண்டுகளாக ரூ.5 லட்சம் சேமித்து வந்தார். சொந்த வீடு கட்டும் கனவுடன் சேர்க்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய்களை கரையான் அரித்து நாசம் செய்த கொடுமை தாங்காமல் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்து விட்டார்.

  ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் மயிலவரத்தைச் சேர்ந்த பெண் ஜமாலியா. பன்றி வளர்த்து விற்கும் தொழில் செய்து வந்தார். வாடகை வீட்டில் இருக்கும் ஜமாலியாவுக்கு சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு.

  இதற்காக தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை தினமும் சேமித்து வந்தார். பரண் மேல் வைத்திருந்த ட்ரங்க் பெட்டியில் அவர் 10,50, 500 என்று அவ்வப்போது கிடைக்கும் தொகையில் ஒரு தொகையை கனவு இல்லத்துக்கான தொகையாக சேமித்து வந்தார்.

  கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொகையைச் சேமித்து வந்ததாகத் தெரிகிறது. சமீபத்தில் பணம் சேமித்த பெட்டியை திறம்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்.

  கஷ்டப்பட்டு சேர்த்த பணம் அத்தனையும் கரையானுக்குத் தீனி ஆகியிருந்தது. நோட்டுகள் ஓட்டை ஓட்டையாகி பயனற்றதாகியிருந்தது. சுமார் ரூ. 5 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 10 ஆண்டுகள் உழைப்பும் வீணாகி சேமிப்பும் இல்லாமல் போனதால் கதறி அழுதார் ஜமாலியா. போலீஸார் வந்து நடந்ததை விசாரித்துச் சென்றனர்.

  பணத்தை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆந்திர அரசு உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கரையான் தின்ற பணத்தை எடுத்து அங்கு வீட்டருகே விளையாடும் குழந்தைகளிடத்தில் ஜமாலியா கொடுத்தார். இதனையடுத்தே இவ்வளவு பணம் சிறுவர்கள் கையில் புழங்கியதையடுத்தே விவகாரம் போலீஸ் பார்வைக்குச் சென்றது, அவர்கள் விசாரணை நடத்தி பணத்தின் மூலத்தை கண்டறிந்து சென்றனர்.

  இந்தக் குடும்பத்துக்கு ஆந்திர அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
  Published by:Muthukumar
  First published: