சிவலிங்கத்தின் அடியில் புதையல்...? கோவிலில் 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்

சிவலிங்கத்தின் அடியில் புதையல்...? கோவிலில் 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்
கொலை நடந்த இடம்
  • News18
  • Last Updated: November 9, 2019, 9:15 PM IST
  • Share this:
கடந்த ஜூலை மாதம் சிவன் கோவில் ஒன்றில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 மாதங்கள் கழித்து திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அடியில் புதையல் இருப்பதாக நம்பிய கும்பல் அதை எடுக்கப் போன போது இந்தக் கொலை நடந்தது அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் 5 பேர் கைதாகியுள்ளனர்.

 

மரகத நாணயம் திரைப்படத்தில் மன்னர் சமாதியில் வைக்கப்பட்டுள்ள மரகத நாணயம் ஒன்றை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயலும். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறந்து போவார்கள். அதேபோல் ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.


 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது காரிக்கோட்டை என்ற ஊர்; இந்த ஊரில் தொன்மையான சிவன் கோவில் உள்ளது. பழைய கோவிலை அகற்றிவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகள் நடந்து வந்தன

இந்த நிலையில் கடந்த ஜூலை 14ம் தேதி நள்ளிரவில் அங்கு படுத்திருந்த பூசாரி சிவராமரெட்டி, அவரது சகோதரி கமலம்மா மற்றும் சத்தியலட்சுமி ஆகிய மூன்ற பேரையும் ஒரு கும்பல் கழுத்தறுத்துப் படுகொலை செய்து தப்பியோடி விட்டது.கோவிலிலும், சிவலிங்கத்தின் மீதும் ரத்தக் கறைகள் இருந்ததால் நரபலி முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது

ஆனால், புதையலைத் தேடும் கும்பல் ஒன்றுதான் இந்தக் கொலைகளை செய்தது என்பது உறுதியான உடன் தனிப்படை போலீசார் தங்கள் விசாரணையை மாற்றினர்

ஆந்திர மாநிலம் கர்நூல், கடப்பா, சித்தூர், அனந்தபூர் மாவட்டங்கள், கர்நாடக மாநிலத்தில் பாகேப்பள்ளி, சிக்பல்லாபூர் , கோலார், டிப்டூர், பெங்களூர், ஹோஸ்கோட்டா மாவட்டங்களிலும் உள்ள புதையல் கும்பல்களைச் சேர்ந்த 330 பேரைப் பிடித்து விசாரித்தனர்

இந்தக் கொலை வழக்கிற்காக மொத்தம் 7,000 கி.மீ துாரம் பயணித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் தனிப்படை போலீசார்

இறுதியில், ஆந்திர மாநிலம் முடிகுப்பா மண்டலம் மங்களவன்கா பகுதியைச் சேர்ந்த அனுமந்த் நாயக், ஸ்ரீகாந்த் நாயக், கணேஷ். வாசுதேவன், கடப்பாவைச் சேர்ந்த சீனிவாஸ் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின

அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமந்த் நாயக், ஸ்ரீகாந்த் நாயக், கணேஷ் ஆகியோர் நண்பர்கள்; வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த வாசுதேவ ரெட்டி மற்றும் சீனிவாஸ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது

காரிக்கோட்டையில் உள்ள சிவலிங்கத்தின் கீழ் புதையல் இருப்பதாகவும் அதை எடுக்க தனது குரு சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய நாயுடு 2 முறை முயன்றதாகவும் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

அந்த சிவலிங்கத்தை உடைத்து புதையலை நாம் எடுக்க வேண்டும் எனவும் அங்கு காவலிருக்கும் 3 முதியவர்களையும் கொலை செய்ய வேண்டும் எனவும் சீனிவாஸ் தனது கும்பலிடம் கூறியுள்ளார்.

வனப் பகுதி என்பதால் கொள்ளையின் போது பாம்புகள் போன்ற விஷஜந்துக்கள் வராமல் இருக்க விலங்குகளின் ரத்ததத்தை தெளிக்கவும் முடிவு செய்தனர்.

அதன்படி ஜூலை 14ம் தேதி நள்ளிரவில் அனுமந்த் நாயக், ஸ்ரீகாந்த் நாயக், கணேஷ் மூவரும் சிவன் கோவிலுக்கு சென்றனர்

துாங்கிக் கொண்டிருந்த 3 முதியவர்களையும் கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டு, 2 பாட்டில்களில் கொண்டு போயிருந்த விலங்குகளின் ரத்தத்தை கோவிலைச் சுற்றி தெளித்துள்ளனர்.

இதையடுத்து சிவலிங்கத்தை சுத்தியலால் உடைக்கத் தொடங்கினர். ஆனால் அது ஒரே கல்லில் செய்யப்பட்ட சிலை என்பதால் உடையவில்லை. இதற்குள் விடியத் தொடங்கியதால் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பெப்பர் ஸ்பிரே, சுத்தியல், கத்தி, இரண்டு பாட்டில் விளக்குகள், ஒரு பைக், 5 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொலை வழக்கில் எவ்விதத் தடயமும் சிக்காத நிலையில் 3 மாதங்களில் கொலையாளிகள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுப்பிமணிய நாயுடுவை போலீசார் தேடி வருகின்றனர்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்