ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பிஹெச்டி மாணவி புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து திருமணத்தை முன்னிட்டு ஊர் திரும்பிய ராமகிருஷ்ணாவை நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடலாம் என்று மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் புஷ்பா.
அங்கு இரண்டு பேரும் சில மணி நேரங்களை செலவிட்டனர். அதன் பின்னர் ‘உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க போகிறேன். எனவே உன் கண்ணை இப்போது கட்டுகிறேன்’ என்று கூறிய புஷ்பா ராமகிருஷ்ணன் கண்ணை தன்னுடைய துப்பட்டாவால் கட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ய முயன்றார்.
இந்த நிலையில் அலறித் துடித்த ராமகிருஷ்ணாவை பார்த்து சற்று மனம் மாறிய புஷ்பா அவரை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். மருத்துவமனையில் டாக்டர்களிடம் நாங்கள் இரண்டு பேரும் மலை மீது உள்ள பாபா கோவிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது கால் தவறி ராமகிருஷ்ணா கீழே விழுந்துவிட்டார். எனவே காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.
ஆனால் மருத்துவர்கள் அவருடைய பேச்சை நம்பவில்லை. எனவே இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது. அதனையடுத்து, புஷ்பாவைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது ராமகிருஷ்ணாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற குற்றத்தை புஷ்பா ஒப்புக்கொண்டார்.
சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொல்ல முயற்சி.. பிஹெச்டி மாணவி கைது
விசாரணையில், ‘பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ நான் திட்டமிட்டிருந்தேன். எனவே எனக்கு திருமணம் செய்து கொள்வதில் இஷ்டமில்லை. ஆனால் இதனை என் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களிடம் என்னுடைய விருப்பத்தை கூற இயலாத நிலையில் இருந்தேன். இதனால் வருங்கால கணவராக இருந்தவரை கொலை செய்து விட்டால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற திட்டம் போட்டு அவரை கொலை செய்ய முயன்றேன் என்று கூறினார். இந்தச் சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.