ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கத்திக்குத்து!

தாக்கப்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆந்திரா முழுவதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்றார். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

  ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்தார்.

  ஜெகன்மோகன் ரெட்டி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு ஹைத்ராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அதில் ஆஜராவதற்காக விசாகப்பட்டினத்திலிருந்து ஹைத்ராபாத்திற்கு விமானம் மூலம் செல்ல அவர் திட்டமிட்டார்.

  விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்த அவர் விஐபி லாஞ்சில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் செல்ஃபி எடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு ரெட்டி சம்மதித்துள்ளார். செல்ஃபி எடுத்த பின்னர், அந்த நபர் கோழி சண்டையில் பயன்படுத்தப்படும் கத்தியால் ரெட்டியைத் தாக்க முயன்றார்.

  சுதாரித்துகொண்ட ரெட்டியின் பாதுகாவலர்கள் அந்த நபரை தள்ளிவிட்டனர். எனினும், ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கையில் லேசான காயம் ஏற்பட்டது.

  அந்த நபரைப் பிடித்த பாதுகாவலர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் விசாகப்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சீனிவாசராவ் என்றும், அவர் விமான நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

  ஜெகன்மோகன் ரெட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஆந்திரா முழுவதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க மாநிலம் முழுவதும் ஆந்திர அரசு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
  Published by:DS Gopinath
  First published: