• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் சந்திரபாபு நாயுடு!

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் சந்திரபாபு நாயுடு!

சந்திரபாபு நாயுடு மற்றும் ராகுல் காந்தி

சந்திரபாபு நாயுடு மற்றும் ராகுல் காந்தி

பாஜக-வுடன் 2014ல் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்காததால் கோபமுற்று, பாஜக-வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை திரட்டிவருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பரம எதிரியான காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருப்பது, நாடாளுமன்ற தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்கும் நாயுடுவின் முயற்சிக்கு நல்ல அடித்தளமிட்டுள்ளது.

ஆந்திராவில் கோலோச்சி வந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த எண்ணிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ், 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். நினைத்தபடியே, குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்து, கடைசி வரை காங்கிரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். ஆனால், தற்போது, தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவை வீழ்த்த காங்கிரசும், தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்துள்ளன. இதை YSR காங்கிரசும், பாஜக-வும், சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்துள்ளன. இந்த தெலங்கானா பார்முலா ஆந்திராவிலும் தொடரும் வகையில், தேர்தல் கூட்டணி அமைத்துள்ளதாக ராகுலும், சந்திரபாபுநாயுடுவும் டெல்லியில் கூட்டாக அறிவித்தனர்.

ஆந்திராவைப் பொறுத்தவரை இது அதிமுக-வும், திமுக-வும் கைகோர்த்தது போலாகும் என்பதால் இதை ஜீரணிக்க தொண்டர்களுக்கு சில நாட்கள் ஆகும். எனினும், இரு பெரும் கட்சிகள் இணைந்ததால் தெலங்கானாவில் 17 தொகுதிகள், ஆந்திராவில் 25 என 42 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் முடிவுகள் கணிசமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக-வுடன் 2014ல் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்காததால் கோபமுற்று, பாஜக-வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை திரட்டிவருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, லோக்தந்த்ரிக் ஜனதா தள் கட்சித் தலைவர் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பாஜக-வுக்கு எதிரான கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

ராகுலை நேற்று சந்திப்பதற்கு முன்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவைுயும் சந்தித்துப் பேசியுள்ளார். தெலங்கானாவில் தான் அமல்படுத்திய பார்முலாவை பின்பற்றி, அனைத்து எதிர்க்கட்சிகளையும், பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். மம்தா பானர்ஜியையும் ஏற்கனவே சந்தித்தபோது இருவரும், மாநிலக் கட்சிகளை ஓரணியில் திரள அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், காங்கிரசுடன், கர்நாடகாவில் ஏற்கனவே குமாரசாமியின் கட்சியும், தமிழகத்தில், திமுக-வும் கூட்டணியில் இருப்பதால், நாயுடுவின் பணி எளிதாகிவிட்டது. கூட்டி, கழித்துப் பார்த்தால், பாஜகவு-க்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும் போல் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: