மத்திய அரசின் அக்னிபதை திட்டத்திற்கு எதிராக சதிசெய்து கலவரம் ஏற்படுத்திய தனியார் பயிற்சி மைய இயக்குனரை பிடித்து
காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசின் அக்னிபதை வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பாக ரயில் நிலையங்களை குறிவைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. நேற்று காலை 9 மணி அளவில் திடீரென்று செகந்திராபாத் ரயில் நிலையத்திற்குள் புகுந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.
மேலும் ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளத்தில் கார், மோட்டார் பைக் ஆகியவற்றை நிறுத்தி ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அப்போது, அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவர்கள் தீவிர கோஷம் எழுப்பினர். இவ்வளவு பெரிய கலவரத்தை ராணுவத்தில் வேலைக்காக காத்திருக்கும் சாதாரண நபர்களால் ஒரே நேரத்தில் திட்டமிட்டு செய்ய முடியுமா என்ற சந்தேகம் மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நடைபெற்ற கலவரம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொழில்நுட்ப ரீதியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் சாய் டிபன்ஸ் அகாடமி என்ற பெயரில் நடத்தப்படும் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வுகளை எழுதுவதற்காக பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் இயக்குனர் சுப்பாராவ் என்பவர் இந்த சதியின் பின்னால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நேற்று இரவு அவரை குண்டூரில் பிடித்த காவல்துறையினர் தற்போது நரசராவ்பேட்டை கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நரசாராவ்பேட்டைக்கு வந்த சுப்பாராவ் அக்னிபாத் திட்டம் காரணமாக தன்னுடைய சாய் டிஃபன்ஸ் அகாடமி நிறுவனத்தை நடத்த இயலாத நிலை ஏற்படும் என்பதால் தன்னிடம் பயின்ற மாணவர்களை தூண்டிவிட்டு செகந்தராபாத் ரயில் நிலையத்தில் பெரும் கலவரத்தை நடத்தியது தெரிய வந்தது.
சாய் டிபன்ஸ் அகாடமி நிறுவனத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எட்டு இடங்களில் கிளைகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ராணுவத்திற்கான தேர்வு எழுதுவது பற்றி பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் பெரும் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் அக்னி பதை திட்டம் முழு அளவில் அமலுக்கு வந்தால் இதுபோல் பயிற்சியளித்து பிழைப்பு நடத்த இயலாது என்பதால் அவர் தன்னிடம் பயின்ற மாணவர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த மூன்று நாட்களாக வாட்ஸ்அப் மூலம் தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தகவல்களை அனுப்பி கலவரம் நடத்த அவர் தூண்டி விட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அக்னிபத் போராட்டம் எதிரொலி - பீகார், ஹரியானாவில் இணைய சேவை ரத்து, 250 பேர் கைது
இந்த நிலையில் அக்னி பாதை திட்டம் பற்றி மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே இவருக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் காவல்துறையினர் கருதுவதாக தெரியவந்துள்ளது. எனவே அதுபற்றியும் சுப்பாராவிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அவரை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.