டி.எஸ்.பி மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர்... மனதை நெகிழவைத்த புகைப்படம்

மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர்

சல்யூட் அடித்து தந்தை அளித்த வரவேற்பை டிஸ்பி பிரசாந்தி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

 • Share this:
  ஆந்திராவில் பணியிலிருந்த காவல் ஆய்வாளர், டி.எஸ்.பி ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்து பெருமிதம் கொண்ட புகைப்படம் அனைவரது மனதையும் ஈர்த்துள்ளது.

  ஆந்திர மாநிலம், திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியில் இருப்பவர் ஒய்.ஷியாம் சுந்தர். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளராகப் பணியில் இருந்து வருகிறார்.

  திருப்பதியில் காவல் பயிற்சி மையத்தில் நேற்று ஓர் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெஸி பிரசாந்தி சீருடையில் வந்திருந்தார். அதிகாரிகளை வரவேற்கும் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர், தனது மகள் பிரசாந்தி சீருடையில் வந்துள்ளதைப் பார்த்து சல்யூட் அடித்து வரவேற்றார். சல்யூட் அடித்து தந்தை அளித்த வரவேற்பை டிஸ்பி பிரசாந்தி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

  தந்தையும் மகளும் புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவத்தை ஆந்திரக் காவல்துறை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுப் பெருமைப்பட்டுள்ளது.  டிஎஸ்பியாக இருக்கும் மகளுக்கு சல்யூட் செய்தது குறித்து காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் கூறுகையில், “ பிரசாந்தி டிஎஸ்பியாக இருக்கிறார். என்னைவிட உயர்ந்த அதிகாரி. அவர் வரும்போது அவருக்கு சல்யூட் செய்வதுதான் முறை. இதில் மகள், தந்தை என்பது கிடையாது. இருந்தாலும், என் மகளை வரவேற்று அவருக்கு சல்யூட் செய்தபோது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது” எனத் தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: