ஆந்திராவில் பெற்றோர்கள் பேச்சை கேட்டு 11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த வக்கீலின் கோர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டு குழந்தைகள் பிறந்த பின் மதுசூதனன் அவரது தாய் உமா மகேஸ்வரி மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோரின் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்த துவங்கினார். தன்னுடைய துன்புறுத்தல் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக கடந்த 11 ஆண்டுகளாக மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒரு இருட்டு அறையில் அடைத்து முடக்கி வைத்திருந்தார்.
அந்த பெண்ணுக்கு யாருடனும் பேச அனுமதி இல்லை. சாய் சுப்ரியாவின் பெற்றோரும் பலமுறை முயன்றும் மகளுடன் பேச அனுமதிக்கவில்லை. மகளை சந்திக்க அவர்கள் நேரடியாக பலமுறை வீட்டுக்கு வந்தனர். ஆனால் அவர்களை விட்டு உள்ளே அனுமதி அளிக்கவில்லை மதுசூதனன் குடும்பத்தினர் .
11 ஆண்டுகள் பொறுத்து பொறுத்து பார்த்த சாய் சுப்ரியாவின் பெற்றோர் கடந்த 28ஆம் தேதி தங்கள் மகளை, மருமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 11 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பது பற்றி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சாய் சுப்ரியாவின் பெற்றோருடன் கடந்த 28ஆம் தேதி மதுசூதனன் வீட்டுக்கு வந்தனர்.
ஆனால் வக்கீல் மதுசூதனன் என்னுடைய வீட்டுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி உள்ளதா, என் வீட்டுக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று அவர்களுடன் நியாயவாதியாக பேசி விரட்டி அடித்தார். ஆனால் போலீசார் மற்றும் சாய் சுப்ரியாவின் பெற்றோர் ஆகியோர் நீதிமன்றத்தில் சர்ச் வாரண்ட் பெற்று நேற்று மதுசூதனன் வீட்டுக்கு வந்தனர். அப்போதும் மதுசூதரன் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் போலீசாரை வீட்டுக்குள் விட மறுத்தனர்.
ஒரு வழியாக நீதிமன்ற அனுமதியை காட்டி வீட்டுக்குள் புகுந்த போலீசார், தனி அறையில் அடைபட்டு கிடந்த சாய் சுப்ரியாவை மீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை பார்த்த நீதிபதி அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உத்தரவு பிறப்பித்தார்.
11 ஆண்டுகள் மனைவியை தனியாக அடைத்து முடக்கி வைத்திருந்த வக்கீல் மதுசூதனன் மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களையும் திரட்டும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வக்கீலை கைது செய்யும் முனைப்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Crime News, Husband Wife, Tirupathi, Torture