4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - பெண் விவசாயிக்கு கிடைத்த வெற்றி!

Judgement

முதலமைச்சரின் கூடுதல் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் ஆட்சியர் என நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை.

  • Share this:
பணியில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 5 பேருக்கு சிறை தண்டனை விதித்திருப்பதுடன், தங்களின் சம்பளத்தில் இருந்து வழக்கு தொடர்ந்த விவசாயிக்கு அபராதம் வழங்க வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பெண் விவசாயி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை - அபராதம்:

வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆந்திர மாநிலத்தின் முதன்மை நிதிச் செயலர் சம்ஷெர் சிங் ராவத், முதலமைச்சரின் கூடுதல் செயலர் ரெவு முத்யல ராஜூ (இவரும் நெல்லூர் ஆட்சியராக பணியாற்றியவர்), நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சக்ரதர பாபு மற்றும் முன்னாள் நெல்லூர் ஆட்சியர் சேஷகிரி பாபு ஆகிய நான்கு அதிகாரிகளுக்கும் சிறை தண்டனையும், அபராதமும் விதித்திருக்கிறது ஆந்திர உயர் நீதிமன்றம்

இதே போல 2017ல் முதன்மை நிதிச்செயலராக இருந்து ஓய்வு பெற்ற மன்மோகன் சிங் எனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.

தண்டனை விவரம்:

சம்ஷெர் சிங் ராவத் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவருக்கும் ஒரு மாத சிறை தண்டனையும், மற்ற மூவருக்கும் இரண்டு வார சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே போல அனைவருக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையை தங்களின் சம்பளத்தில் இருந்து வழக்கு தொடர்ந்த பெண் விவசாயிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி தேவானந்த் உத்தரவிட்டிருக்கிறார்.

Also Read: பஞ்ஷிர் போராளிகளிடம் செம அடி வாங்கிய தாலிபான்கள்.. நூற்றுக்கணக்கில் பலி என தகவல்!

மேலும், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு தரும் வகையில் தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் எரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயியான தலபகா சவித்ரமாவின் கணவருக்கு சொந்தமாக இருந்த 3 ஏக்கர் பட்டா நிலத்தை, தேசிய மனநல இன்ஸ்டிடூட் அமைப்பதற்காக வருவாய் அதிகாரிகள் கையகப்படுத்தியிருக்கின்றனர். இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு முறைப்படி தகவலும், இழப்பீடு தொகையையும் அதிகாரிகள் வழங்கவில்லை.

இந்த நிலையில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி முறையிட்ட நிலையில் 2016 டிசம்பரில், விவசாயிக்கு உரிய இழப்பீடு தருவதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

Also Read:   வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கிய மிடில் கிளாஸ் குடும்பத் தலைவி – அதிர்ந்த போலீசார்!

ஆனால் வாக்குறுதிப்படி அதிகாரிகள் நடந்து கொள்ளாததால் 2017ல் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார் தலபகா சவித்ரமா. 2017 பிப்ரவரி 10ம் தேதி தலபகா சவித்ரமாவுக்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவையும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மெத்தனமாக செயல்பட்ட பணியில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், ஓய்வு பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் தற்போது சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: