AN UNACCOUNTED AMOUNT OF RS 1POINT5 CRORE WAS SEIZED IN PUNALUR KOLLAM ARU
மதுரையைச் சேர்ந்தவர்களிடமிருந்து கேரளாவில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல்: பணப்பட்டுவாடாவிற்காக கொண்டுவரப்பட்டதா?
கேரள தேர்தல் 2021
பணம் வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த ராஜீவ் தியாகராஜன் மற்றும் சதிஷ் குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பணத்தை தங்கம் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கணக்கில் வராத 1.5 கோடி ரூபாயை மதுரையைச் சேர்ந்த நபர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் பணம் வைத்திருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க தேர்தல் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அண்டை மாநில எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே சென்னை எழும்பூரில் இருந்து சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இரு நபர்களிடமிருந்து புனலூரில் 1.5 கோடி ரூபாயை ரயில்வே காவல்துறையினர் இன்று காலை பறிமுதல் செய்தனர். கைப்பை ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக இருந்துள்ளன.
இது தொடர்பாக பணம் வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த ராஜீவ் தியாகராஜன் மற்றும் சதிஷ் குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பணத்தை தங்கம் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய புனலூர் காவல் ஆய்வாளர் சலீம் குமார், கொல்லம் ரயிலில் வந்த அவர்கள் கோட்டக்கரா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செங்கனூருக்கு பேருந்தில் பயணிக்க திட்டமிட்டிருந்ததாக கூறினர். இருப்பினும் இது நம்பும் வகையில் இல்லை எனவும், இப்பணம் சட்டமன்ற தேர்தலுக்கான பணப்பட்டுவாடா செய்யும் நோக்கத்துடன் கொண்டு வந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் நோக்கில் அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக பணம் கொண்டு வரப்படுகிறது என்ற உளவுத்துறையின் தகவலின்பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த முறை பிரச்னைக்குரியதாக மாறிய பூத்களில் பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த முறை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனர். கடந்த முறை கேரள காவல்துறையினர் பிரச்னையில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த முறை கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.