தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணைக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உத்சவ் பெயின் என்பவர் பிரமாண பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.
அதில், புகாரளித்த பெண் சார்பில் ஆஜராக, அஜய் என்பவர் தம்மை அணுகியதாகவும் இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் வரை தர தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஃபாலி நாரிமன் மற்றும் தீபக் குப்தா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி அருண் மிஷ்ரா, பெரிய வழக்குகள் வரும் போதெல்லாம், இதுபோன்று வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாகக் கூறினார்.
நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்க விரும்புவதும் நெருப்பில் கையை வைப்பதும் ஒன்றுதான் என்று எச்சரித்த அவர், அதிகாரத்தாலும், பண பலத்தாலும் நீதியை வாங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே நீதித்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதாகக் கூறிய அவர், மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதாகக் கூறினார்.
பாலியல் புகார் சதி குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணைக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
டெல்லி காவல்துறை, உளவுத்துறை ஆகிய அமைப்புகள் நீதிபதி பட்நாயக் விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, நீதிபதி பாப்டே தலையிலான நீதிபதிகள் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Justice Ranjan Gogai