மருத்துவமனைகளுக்கு இலவச சவாரி - ராஞ்சி ஆட்டோ ஓட்டுநரின் மனிதநேயம்

மருத்துவமனைகளுக்கு இலவச சவாரி - ராஞ்சி ஆட்டோ ஓட்டுநரின் மனிதநேயம்

ஆட்டோ ஓட்டுநர் ரவி அகர்வால்

ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து இந்த சேவையை செய்து வருகிறார். தனது வாழ்வாதாரத்துக்காக சாதாரண சவாரிகளையும் இவர் மேற்கொள்கிறார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். பிரபலங்கள் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை இந்த இக்கட்டான சூழலில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். ராஞ்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்பவர்களை இலவசமாக அழைத்து செல்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை இலவசமாக தனது ஆட்டோவில் அழைத்து செல்கிறார்.

    ராஞ்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி அகர்வால் என்பவர்தான் இந்த சேவையை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு வாகன கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். அவர் எவ்வளவு பணம் வேண்டுமானலும் பணம் தருகிறேன் மருத்துவமனைக்கு போக வேண்டும் அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறி அப்பகுதியில் இருந்த வாடகை வாகனங்களை வைத்திருப்பவர்கள் கொரோனா அச்சம் காரணமாக முன்வரவில்லை. ரவிதான் அந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். அதன்பின்னர்தான் அவருக்கு இந்த சேவை செய்ய வேண்டிய எண்ணம் வந்துள்ளது.

    இதுகுறித்து பேசிய ரவி அகர்வால், ‘ அந்தப்பெண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனக் கூறியதும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பயத்தின் காரணமாக அவருக்கு உதவ முன்வரவில்லை. அவர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றார். யாரும் உதவி செய்யவில்லை. நான் அந்த பெண்ணை மருத்துவமனையில் இறக்கிவிட்டேன். அவருக்கும் கொரோனா தொற்று இருந்ததா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அவர் எனக்கு பணம் கொடுத்தார். நான் அதனை ஏற்க மறுத்துவிட்டேன். அதன்பின்னர்தான் உணர்ந்தேன் இந்த நகரத்தில் பலரும் இதுபோன்று உதவி கிடைக்காமல் இருக்கிறார்கள் என்று.

    இதனையடுத்து இதுபோன்று தவிக்கும் மக்களை மருத்துவமனைக்கு  இலவசமாக அழைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். எனக்கு இப்போது நிறைய போன்கள் வருகிறது. சிலர் நான் நிறைய மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்திருக்கிறேன் என எண்ணி கால் செய்கிறார்கள். ஆக்சிஜன் இருக்கிறதா அல்லது படுக்கை வசதிகள் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு நிறைய பேர் உதவி கேட்டு போன் செய்கிறார்கள். கொரோனா நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்பவர்களை இலவசமாக ஏற்றிச்செல்கிறேன்” என்கிறார்.

    இந்த மாதம் ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து இந்த சேவையை செய்து வருகிறார். தனது வாழ்வாதாரத்துக்காக சாதாரண சவாரிகளையும் இவர் மேற்கொள்கிறார்.
    Published by:Ramprasath H
    First published: