• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 60 பேர் படுகாயம்

பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 60 பேர் படுகாயம்

தசரா விழா

தசரா விழா

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பஞ்சாப் மாநிலம்அமிர்தசரசில், தசரா கொண்டாட்டத்தின் போது, தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில், 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் செளரா பஜார் பகுதியில் உள்ள ஜோடா பதக் என்ற பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய காலி இடத்தில், தசரா கொண்டாட்டம் நடந்துள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக, பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிங் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் நிறைவாக, மாலை 6.45 மணிக்கு ராவணன் உருவ பொம்மை பட்டாசுகள் மூலம் கொளுத்தப்பட்டது. பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தண்டவாளம் வழியாக ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ரயில் அதிவேகத்தில் கடந்து சென்றது

  தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள், பட்டாசுகள் வெடித்த சத்தத்தில் ரயில் வருவதைக் கவனிக்கவில்லை. அதிவேகத்தில் வந்த ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதி துாக்கி வீசி விட்டு சென்றது. அதையடுத்து அந்த இடமே அலறல் மயமானது. என்ன நடந்தது என உணர முடியாமல் மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர்

  இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதையடுத்து அந்த ரயில் பாதையில் 3 மணிநேரத்திற்கு ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு , குடியரசுத் தலைவர் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்துள்ள அறிக்கையில், மீட்புப் பணி முழுவேகத்தில் நடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சி்ங், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்

  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ரயில் விபத்து நேர்ந்த தசரா கொண்டாட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியால் தான் கூட்டம் அதிகளவிற்கு வந்தது என்றும் அவர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தார் என்றும் சரியான நேரத்திற்கு வந்திருந்தால், ரயில் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி முடிந்திருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

  இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நவ்ஜோத் கவுர் சித்து, விபத்து நடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே தான் அங்கிருந்து சென்று விட்டதாக விளக்கம் அளித்துள்ளார். ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி, ரயில்வே துறை மற்றும் தசரா கமிட்டியிடம் பல முறை கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ரயில் ஓட்டுநர் ஒலி எழுப்பாமல் அதிவேகத்தில் வந்ததால் ரயில் வந்ததை யாராலும் உணர முடியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Saroja
  First published: