முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் அமித் ஷா தலைமையில் இன்று தென் மண்டல கவுன்சில் கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கேரளாவில் அமித் ஷா தலைமையில் இன்று தென் மண்டல கவுன்சில் கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கோவளத்தில் தனியார் ஓட்டலில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தென் மாநிலங்களில் நதி நீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் மாநிலங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டல அளவிலான கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள கடலோர சுற்றுலா தலமான கோவளத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். கடந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற நிலையில் 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Also Read:  ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? - கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்

முன்னதாக சென்னையில் இருந்து நேற்று காலை 11:40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட அவரை விமான நிலையத்தில் திமுக எம்.பி டி.ஆர் பாலு, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.திருவனந்தபுரம் சென்றடைந்த முதலமைச்சரை விமான நிலையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பிறகு கோவளம் செல்லும் வழியில் முதலமைச்சருக்கு கொட்டும் மழையில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.அதனைத் தொடர்ந்து கோவளத்தில் உள்ள விடுதியில் தங்கிய முதலமைச்சர் ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு திருவனந்தபுரம் வந்தடைந்தார், விமான நிலையத்தில் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.இம்முறை தமிழக முதலமைச்சர், கேரள முதல்வர் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.

கோவளத்தில் தனியார் ஓட்டலில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தென் மாநிலங்களில் நதி நீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு. போக்குவரத்து ஒருங்கிணைப்பு, சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இரவு 7 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை புறப்படுகிறார்.

First published:

Tags: Amith shah, Kerala CM Pinarayi Vijayan, MK Stalin