காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக அங்கு சென்று உள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவு 370-தின் நீக்கத்திற்கு பின் முதல்முறையாக அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார்
டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றடைந்த அமித்ஷாவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்றார். பின்னர் நவ்காம் சென்ற அவர், அண்மையில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பர்வேஸ் அகமதின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அகமதின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆவணங்களையும் அவர் வழங்கினார்.
பின்னர் ஸ்ரீநகரில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற அமித்ஷா, ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் துணை நிலை ஆளுநர், ராணுவ அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் சங்க கூட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பெருமளவு உதவி புரிவதாக தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாளான ஆகஸ்ட் 5, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என கூறினார். சிறப்பு சட்டத்தை ரத்து செய்ததால் பயங்கரவாதம் மற்றும் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஷார்ஜா இடையேயோன விமான சேவையையும் அமித் ஷா தொடங்கி வைத்தார். அமித்ஷாவின் வருகையையொட்டி, ஜம்மு- காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் ஸ்ரீநகர் மற்றும் லால்சவிக் பகுதிகளில் வான்வழி கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையின் 50 குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் பல இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பதுங்கு குழிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக பிரதாப் பார்கில் டிரோன்களையும் போலீசார் சோதனை செய்தனர். புலம் பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 700 பேரில் 26 பேர் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.