ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாத்வியின் இந்துத்துவ தாக்குதல்கள்: கோயில்களுக்குச் சென்று சமாளிக்கும் திக்விஜய சிங்! போபால் நிலவரம்

சாத்வியின் இந்துத்துவ தாக்குதல்கள்: கோயில்களுக்குச் சென்று சமாளிக்கும் திக்விஜய சிங்! போபால் நிலவரம்

திக்விஜய சிங், சாத்வி பிரக்யா தாகுர்

திக்விஜய சிங், சாத்வி பிரக்யா தாகுர்

சாத்வியை வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. போபாலில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

  • News18
  • 4 minute read
  • Last Updated :

போபாலிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள பெராசியா நகரத்தில் நடைபெற்ற பா.ஜ.க தொண்டர்கள் கூட்டத்தில், நூற்றுக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் சாத்வி பிரக்யா தாகுருக்காக காத்திருந்தனர்.

சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக சாத்வி தாகுர் வந்தார். கடுமையான வெயிலில் காத்திருந்த தொண்டர்களிடம் தாமதமாக வந்ததற்கு சாத்வி எந்த வருத்தமும், மன்னிப்பும் கேட்கவில்லை. சாத்வி, கண்களை மூடி மந்திரத்தைச் சொல்லத் தொடங்கியுடன் தொண்டர்கள், தாங்கள் நீண்ட நேரம் காத்திருந்ததை மறந்துவிட்டனர். தான் சொல்லும் மந்திரத்தை மக்களும் சொல்கின்றனர் என்பதை சாத்வி அறிந்திருந்தார்.

போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக சாத்வி அறிவிக்கப்பட்டு, மூன்று நாள்களுக்கு பிறகு, அவருக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று சாத்விக்குத் தெரியும். முன்னாள் முதலமைச்சரும், வலிமையான காங்கிரஸ் தலைவருமான திக்விஜய சிங்குக்கு எதிரான வேட்பாளராக சாத்வி களமிறங்கப்படும்போது, சாத்விக்கு மக்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது உறுதியாகும்.

சாத்வி ஒவ்வொரு மேடையில் பேசும்போதும், ஆர்.எஸ்.எஸையும், இந்துத்துவாவை நம்புகிறவர்களையும் திக்விஜய சிங் தீவிரவாதி என்று கூறுகிறார் என்று பூதாகாரப்படுத்திவருகிறார். இந்துக்களையும், சனாதன தர்மத்தையும் ஒவ்வொரு நேரமும் திக்விஜய சிங் அவமானப்படுத்துகிறார் என்று கூறும் சாத்வி, இந்துக்களுக்கான மரியாதையை நான் உறுதி செய்வேன் என்று பேசிவருகிறார்.

தேசப்பற்றாளர்களை காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர். இந்து தீவிரவாதம் என்ற வார்த்தை காங்கிரஸ் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. அதன்மூலம், சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி காங்கிரஸ் அரசியல் ஆதாயம் பெறுகிறது. காவித் தீவிரவாதம் என்றால் என்ன? அவர்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது காவி உடையுடன் கோயிலைச் சுற்றிவருகின்றனர்’ என்று பொதுமக்கள் உசுப்பேற்றும் வகையில் சாத்வி பேசிவருகிறார்.

திக்விஜய சிங் முன்னாடி பேசிய வார்த்தைகள் தற்போது அவரைச் சுற்றிவருகின்றன. பல்வேறு வழிகளில் இந்துகளை சமாதானப்படுத்தும் வழிகளில் தற்போது திக்விஜய சிங் ஈடுபட்டுள்ளார். போபாலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் திக்விஜய சிங்கின் தேர்தல் அலுவலகத்தை சங்கராச்சார்யா, சாதுக்கள், துறவிகள் திறந்துவைத்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவர், எல்லா கோயில்களுக்கும் சென்றுவருகிறார். அரசியல் அரங்குக்குள் சாத்வி வருகை தந்ததும், தொடர்சியாக திக்விஜய சிங்கை இந்துக்களின் எதிரி என்று வசை பாடுவதும் திக்விஜய சிங்கை கோயில் கோயிலாக செல்லவைத்துள்ளது. ஒரு கடத்தில் போபாலில் வளர்ச்சி குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று திக்விஜய சிங் முடிவெடித்துள்ளார். இந்த தேர்தல் பிரச்சாரம், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸின் மதவாத மற்றும் பெரும்பான்மை தேசியவாதத்துக்கும் காங்கிரஸின் மித இந்துத்துவ நிலைப்பாட்டுக்கும் இடையேயானதாக இருக்கும். அதனால், வளர்ச்சி தொடர்பான வாதங்கள் பின்னுக்குச் சென்றுள்ளன.

சாத்வியின் தாக்குதல்கள்:

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சாத்வி, காவி உடைகளுக்கு காவித் தீவிரவாதம் என்று பெயரிட்டு அழைத்தவர்களை மக்கள் தண்டிக்கவேண்டும் என்று பேசினார். இதுதான் தேர்தல் பிரச்சாரத்துக்கு யுக்தி என்பதை அவர் முடிவெடுத்துவிட்டார். பா.ஜ.க தலைவர்களும் பா.ஜ.க தொண்டர்களும் இந்துத்துவ பிரச்சாரம் பெரிய அளவில் பலனைத் தரும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

சாத்வியின் அரசியல் வருகை குறித்து தெரிவித்த போபால் தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.பியும் மூத்த தலைவருமான அலோக் சஞ்சார், ‘சாத்வியை வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. போபாலில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அவருடைய வருகை மத்திய பிரதேசத்தில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார். அலோக் சஞ்சார்தான், சாத்வியின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னின்று கவனித்துவருகிறார். இந்துத்துவத்தை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நினைத்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்துத்துவத்தை தீவிரமாக வலியுறுத்துவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவிக்கிறார். வளர்ச்சி என்பதும் முக்கியமான அம்சம்தான். ஆனால், சாத்விக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு வளர்ச்சி என்ற வாதம் மட்டும் போதுமானது இல்லை என்று அலோக் சஞ்சார் நம்புகிறார்.

மேலும், காவல்துறையினரால் கடுமையாக பாதிக்கப்பட்டவள் என்ற அம்சத்தையும் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார். மாலேகான் குண்டு வெடிப்புக்காக சிறையிலிருந்த 9 ஆண்டு காலம் துயரம் குறித்து கண்ணீர் விட்டு அழுது மக்கள் ஆதரவைப் பெறுகிறார். சிறையில் இருந்தபோது, காவல்துறை அதிகாரிகளின் கொடுத்த சித்ரவதைகளை மக்களிடம் பகிர்ந்துகொள்கிறார். சாத்வியினுடைய இந்த யுக்தி பா.ஜ.கவின் பெண் தொண்டர்களிடமும், பெண் வாக்களார்களிடம் மிகுந்த பிணைப்பை உருவாக்குகிறது. சாத்வி பேசும்போது, பலர் அவர்களது கண்ணீரைத் துடைப்பதை பார்க்க முடிகிறது. மகிளா மார்சா தலைவர் ஹேமலதா பார்கவா, போபாலின் கிராமப் புற பகுதிகளில் சாத்வியின் இரக்கத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார். சாத்விக்கு பெண்கள் வாக்கு பெருமளவில் கிடைக்கும் என்று ஹேமலதா நம்புகிறார். போபால் கிராமப் புற பகுதிகளில், ஆண்களை விட பெண்களின் வாக்கு விகிதம்தான் அதிகமாக உள்ளது.

ஹேமலதா மற்றும் அவருடைய குழு, பல பிரிவுகளாக பிரிந்து 20 முதல் 25 கிராமங்களில் குழுக்களா பிரிந்து பணியாற்றிவருகின்றனர். அவர்கள், கிராமத்திலுள்ள பெண்களை அணுகி, மத்திய அரசு செய்த நலத்திட்டங்களை எடுத்துகூறிவருகின்றனர். மேலும், சாத்விக்கு சிறையில் நடைபெற்ற சித்ரவதைகளையும் எடுத்துரைக்கின்றனர்,

திக்விஜய சிங்கின் பிரச்சார யுக்தி:

பல நிகழ்வுகளில், திக்விஜய சிங்குக்கும் சாத்விக்கு இடையை மோதல்வரும் வகையில் ஊடகங்கள் கேள்வி எழுப்பினாலும், சாத்விக்கு எதிராக திக்விஜய சிங் ஒரு வார்த்தை கூட பேசுவது கிடையாது. சாத்வி எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதைக் கூட திக்விஜய சிங் பேசுவது கிடையாது. பா.ஜ.க வேட்பாளராக சாத்வியை அறிவித்த சில மணி நேரங்களில் பேசிய திக்விஜய சிங், ‘போபாலுக்கு சாத்வியை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார். மதவாதத்தை பயன்படுத்தி வாக்காளர்களை ஒன்று சேர்க்க பா.ஜ.க முயலும் என்பதில் திக் விஜய சிங்கும் அவரது பிரச்சாரக் குழுவினரும் கவனமாக உள்ளனர். போபால் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் 19.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 4.5 லட்சம் பேர் முஸ்லீம் வாக்காளர்கள்.

சாத்விக்கு எதிராக நேரடியாக வார்த்தைப் போரை உருவாக்கக் கூடாது என்பதில் திக்விஜய சிங் தெளிவாக உள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர்களிடமும், செய்தித்தொடர்பாளர்களிடமும் அதனைத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். நம் கட்சியினர் வளர்ச்சி குறித்து மட்டுமே பேசவேண்டும். மதவாதத்தைப் பயன்படுத்தி யாரையும் தூண்டக் கூடாது என்று திக்விஜய சிங் உத்தரவிட்டுள்ளார்.

கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்து, மக்களைக் கவருவதற்காக, போபாலை பா.ஜ.க மாற்றாந் தாய் மன்பான்மையுடன் பார்க்கிறது என்ற வாதத்தையும் திக்விஜய சிங் முன்வைத்துவருகிறார். 30 வருடங்களாக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள்தான் போபால் தொகுதியின் எம்.பி.யாக இருந்துவருகிறார்கள். ஆனால், இந்தத் தொகுதிக்காக அவர்கள் என்ன கொடுத்தார்கள்? பெங்களூரு, புனே, ஹைதராபாத்துக்குதான் வேலைக்காக போபாலிலிருந்து இளைஞர்கள் செல்கின்றனர். வளர்ச்சியில் போபால் ஏன் பின்தங்கி உள்ளது? என்று பிரச்சாரங்களில் திக்விஜய சிங் தொடர்ச்சியாக பேசிவருகிறார். அவருடைய அறிக்கையில், போபாலுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்துவிளக்கியுள்ளார்.

திக்விஜய சிங்கின் சமீபத்திய கோயில் பிரவேசங்களைத் தவிர, அவரின் நான்கு மாத கால நர்மதா நடைப்பயணத்தை(Narmada Parikrama) காங்கிரஸ் கட்சியின் விளம்பரப்படுத்துகின்றனர். இந்துகளின் வாக்குகளுக்காக, காங்கிரஸ் கட்சியின் புது காதல் என்று பா.ஜ.க விமர்சனம் செய்துவருகிறது. திக்விஜய சிங் தொடர்ச்சியாக இந்து கோயில்களுக்குச் செல்வதால், முஸ்லீம் மக்களின் வாக்குகளை திக்விஜய சிங் இழப்பார் என்று பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்தூரின் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் சங்கானி பேசும்போது, திக்விஜய சிங்கைவிட பெரிய இந்துகளின் தலைவர் இருக்க முடியாது. அவருடைய 70 வயதில் 3,500 கி.மீ நடைப்பயணம் செய்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் மத ரீதியான தாக்குதலைச் சமாளிப்பதற்காக, சாதுக்கள், துறவிக்களின் ஆதரவைப் பெறுவதில் திக்விஜய சிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். போபால் தொகுதியின் பிரச்சாரம், மதவாதத்தையை அடிப்படையாகக் கொண்டு சுழன்று வருகிறது என்பது பெரும் வருத்தம்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see:

First published:

Tags: Bhopal S12p19, BJP, Congress