ஹோம் /நியூஸ் /இந்தியா /

முதல்வருக்கான அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்ரே.. பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனவும் அறிவிப்பு

முதல்வருக்கான அரசு இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்ரே.. பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனவும் அறிவிப்பு

உத்தக் தாக்ரே

உத்தக் தாக்ரே

Maharastra: முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை உத்தவ் தாக்கரே நேற்றிரவு காலி செய்தார். அரசு இல்லத்தில் இருந்து உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு பந்த்ராவில் உள்ள சொந்த வீடானா மாதோஸ்ரீ பங்களாவிற்கு குடிபெயர்ந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ஆட்சி கலையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என அறிவித்த முதல்வர் உத்தவ் தாக்ரே முதலமைச்சர் இல்லத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் வெளியேறினார்.

முதலமைச்சர் பதவிக்கு ஏற்பட்ட போட்டி காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில், சிவசேனா எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சிவசேனா சட்டமன்ற குழு தலைவரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அக்கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சொகுசு ஓட்டலில்  தங்கினர். சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பதாக தெரிவித்த அவர்கள், நள்ளிரவில் சூரத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவை விட்டு தாங்கள் விலக மாட்டோம் என்றும், பால் தாக்ரேவின் இந்துத்துவாவைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியாத சூழலில், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு  விடுத்தார். ஆனால்,  உத்தவ் தாக்ரேவிற்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அதில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

மேலும் படிக்க: நான் பதவி விலக தயாராக உள்ளேன் - மௌனம் கலைத்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

இதனிடையே, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 7 பேர் உட்பட 46 எம்.எல்.ஏக்கள் தங்களுடன் உள்ளதாகவும், உத்தவ் தாக்ரே உடன் தான் இதுவரை பேசவில்லை என்றும், ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்நிலையில், குஜராத் அழைத்து செல்லப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ. நிதின் தேஷ்முக் நாக்பூர் திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தான் கடத்தப்பட்டடாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தன்னை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று தான் காயங்களால் அவதிப்பட்டதை போன்று பிம்பத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், பேஸ்புக் வாயிலாக மகாராஷ்டிரா மக்களிடம் உத்தவ் தாக்ரே உறையாற்றினார்.  அப்போது, சிவசேனாவும், ஹிந்துத்துவாவும் ஒன்று தான் என குறிப்பிட்டார்.  2019ல் கூட்டணியை அமைத்த போது, சரத் பவார் மற்றும் சோனியா காந்தி தன்னை நம்பி, முதலமைச்சர் பதவியை ஏற்க வலியுறுத்தியதாக கூறினார். ஆனால், தற்போது தன்னை சேர்ந்தவர்களே தன்னை வேண்டாம் என்று கூறுவதாக வேதனை தெரிவித்தார்.

அவர்களில் யாருக்கேனும் தான் முதலமைச்சர் பதவியை வகிப்பது பிடிக்கவில்லை என்றால், நேரில் வந்து  முகத்தை பார்த்து கூறலாம் என்றும் . முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அவர்கள் கைகளிலேயே  கடிதத்தை வழங்கிவிட்டு,  உடமைகளுடன் முதலமைச்சர் இல்லத்தை காலி செய்ய தயார் எனவும் கூறினார். கட்சி தொண்டர்கள் கூறினால், சிவசேனா கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ய தயார் என அறிவித்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தனக்கு எதிராக இருப்பதும், தனக்கு அவமானம் என்றும் தாக்ரே தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவி வரும், போகும்; ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து எனவும், கடந்த 2 ஆண்டுகளில் மக்களிடம் அதிக பாசத்தைப் பெறும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும்  உத்தவ் தாக்ரே கூறினார்.

இதனிடையே, சிவசேனா கட்சியைச் சேர்ந்த சர்வாங்கர், மங்கேஷ் குடால்கர் ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஷிண்டே முகாமிற்கு தாவியுள்ளனர். அதைத்தொடர்ந்து, ஏக்நாத் சிண்டே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மட்டும் பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிவசேனா கட்சியை காப்பாற்ற இயற்கைக்கு முரணான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில்,முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை உத்தவ் தாக்கரே நேற்றிரவு காலி செய்தார். அரசு இல்லத்தில் இருந்து உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு பந்த்ராவில் உள்ள சொந்த வீடானா மாதோஸ்ரீ பங்களாவிற்கு குடிபெயர்ந்தார். மாதோஸ்ரீ இல்லம் முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி உத்தவ் தாக்கரேவை வரவேற்று முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை சந்தித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே உற்சாகப்படுத்தினார்.

First published:

Tags: Maharastra, Uddhav Thackeray