போதை மருந்து கொகெய்ன் விவகாரம்: மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைதால் பரபரப்பு
கைது செய்யப்பட்ட பாஜகவின் ராகேஷ் சிங்.
மார்ச் 2019-ல் பாஜகவில் சேரும் முன் ராகேஷ் சிங் காங்கிரஸில் இருந்தார். 2016-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸிடம் தோல்வியடைந்தார்.
கொகெய்ன் என்ற போதை வஸ்துவை வைத்திருந்ததற்காகவும் போதை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் முக்கிய சதியாளராகவும் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ராகேஷ் சிங் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய் இரவு கிழக்கு புர்த்வானில் உள்ள கல்சியில் போலீசாரிடம் கையும் களவுமாகச் சிக்கினார் ராகேஷ் சிங்.
இவரது கைது தினமான நேற்று பரபரப்பான சில விஷயங்கள் நடந்தன. இவரைக் கைது செய்யும் முன் ராகேஷ் சிங் வீட்டுக்குச் சென்ற போலீஸார் இவரது மகன்களான சாகேப் சிங் (22), சோஹம் சிங் (24) ஆகியோரை முதலில் தூக்கினர். அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக இவர்களை போலீஸார் கைது செய்ததாகத் தெரிவித்தனர். இவர்களைக் கைது செய்த போது அலிபூரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த போதை மருந்து வழக்கில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாநில செயலர் பமீலா கோஸ்வாமியும் இவரது நண்பரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இவரது காரிலிருந்து 90 கிராம் கொகெய்ன் கைப்பற்றப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டனர். அப்போது கோஸ்வாமி என்ன கூறினார் என்றால் இது ராகேஷ் சிங்கின் சதி என்றார்.
இதனையடுத்து கொல்கத்தா லால்பஜார் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ராகேஷ் சிங்கிற்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர், ஆனால் எனக்கு டெல்லிதான் முக்கியம் என்று கூறி ராகேஷ் சிங் புறக்கணித்துள்ளார். பிப்ரவரி 26-ல் ஆஜராகிறேன் என்று கூறினார் ராகேஷ் சிங்.
இந்நிலையில் பாஜக செல்வாக்கு மிகுந்த நபரான ராகேஷ் சிங் கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
டெல்லி செல்வதாகக் கூறிவிட்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் ராகேஷ் சிங். பிறகு இவரை ஒரிசா எல்லையில் பிடித்துள்ளனர்.
மார்ச் 2019-ல் பாஜகவில் சேரும் முன் ராகேஷ் சிங் காங்கிரஸில் இருந்தார். 2016-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸிடம் தோல்வியடைந்தார்.
ராகேஷ் சிங் மீது 25க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. மே 2019-ல் அமித் ஷாவின் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்குத் தலைவனும் ராகேஷ் சிங் தான்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பமீலா கோஸ்வாமி ஒரு மாடல், மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். இவர் ஜூலை 21, 2019-ல் பாஜகவில் சேர்ந்தார்.