பஞ்சாப் காங்கிரஸில் உச்சகட்டத்தில் உட்கட்சி மோதல்: 58 எம்.எல்.ஏக்களுடன் மாஸ் காட்டும் அமரீந்தர் சிங்

அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சிக்குள் நடைபெறும் உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது.

  • Share this:
    காங்கிரஸ் கட்சியையும் உட்கட்சிப் பூசலையும் பிரிக்கவே முடியாது என்பதுபோல எல்லா மாநிலங்களிலும் உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்துக்கும், அப்போது காங்கிரஸில் இருந்த ஜோதிர்ராதித்ய சிந்தியாவுக்கு இடையே உட்கட்சிப் பூசல் இருந்தது. அவர், அவரது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவுக்குச் சென்றார். அதனையடுத்து, ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெல்லாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ரெசார்ட்டுக்குச் சென்று தங்கும் அளவுக்குச் சென்று பின்னர் ராகுல் காந்தி தலையிட்டு பிரச்னையை முடித்துவைத்தார்.

    அதேபோல, பஞ்சாப்பில் கடந்த சில மாதங்களாக தற்போதைய பஞ்சாப் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் அமரீந்திர் சிங்குக்கும் இடையில் தீர்க்க முடியாத மோதல் இருந்துவருகிறது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை, காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் அவரது ஆதரவாளர்களும் பொது இடத்தில் விமர்சிக்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அமரீந்தரின் நடவடிக்கைகளை சித்து வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசி விமரிசித்து வந்தார்.

    பிரச்னை உச்சத்தை எட்டிய நிலையில், நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசி இருந்தார். அதேபோல் டெல்லி சென்ற பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதனையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படுவதற்கு அமரீந்தர் சிங் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், பிரச்னை தற்காலிகமாக முடித்துவைக்கப்பட்டது. இந்தநிலையில், பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    சித்து ஆதரவாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் மல்வீந்தர் மலி கடந்த வாரம் அளித்த பேட்டியில், காஷ்மீர் சுதந்திரமான நாடு என்றும் அதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துள்ளன என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதற்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், ‘காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி. அதைதனிநாடு என்று கூறுவது தேசவிரோதம். சித்து அவரது ஆலோசகர்களை அடக்கிவைக்கவேண்டும்’ என்று காட்டமாக விமர்சித்திருந்தார். சித்துவை அமரீந்தர் சிங் காட்டமாக விமர்சித்த நிலையில் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் பதவி விலக வேண்டும் என்று 4 அமைச்சர் உள்ளிட்ட சித்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் 30 பேர் வலியுறுத்திவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், அமரீந்தர் சிங் தன்னுடைய பலத்தை நிரூபிக்க அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை பஞ்சாப் உள்துறை அமைச்சர் ரானா குர்மீத் சோதி இல்லத்தை விருந்துக்கு அழைத்துள்ளார். அதில், 58 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் கலந்துகொண்டனர். ஒரு ஆண்டில் பஞ்சாப்பில் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவுவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Karthick S
    First published: